ஸ்ரீஹரிகோட்டா: சூரியனை நோக்கிய தனது நீண்ட பயணத்தை ஆதித்யா எல்-1 விண்கலன் வெற்றிகரமாகத் தொடங்கியதாக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்தார்.
இன்று காலை 11.50 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்-1 விண்கலன் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்டத்தில் இருந்து முதல் 63 நிமிடங்கள் மிக முக்கியமானதாக, சவால் நிறைந்ததாக இருந்தது. ராக்கெட் தனது பல்வேறு படிநிலைகளையும் வெற்றிகரமாகக் கடந்த நிலையில் 63 நிமிடங்களுக்குப் பின்னர் மிஷன் வெற்றியை இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இஸ்ரோ மையத்தில் பேசிய சோம்நாத், “ஆதித்யா எல்-1 விண்கலன் வெற்றிகரமாக புவியின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. ஆதித்யா எல்-1 தனது நீண்ட பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளது. அடுத்த 125 நாட்கள் அது சூரியனை நோக்கிப் பயணித்து லாக்ராஞ்சின் எல்-1 இலக்கை எட்டும். இந்தத் திட்டத்துக்கு ஆதரவாக இருந்த ஆதித்யா-1 திட்ட இயக்குநர் நிகர் சாஜி, இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் பாராட்டுகள். ஆதித்யா எல்-1 பயணத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ள இந்நாளில் இன்னொரு தகவலையும் பகிர விரும்புகிறேன். சந்திரயான்-3 லேண்டர், ரோவரை உறக்க நிலைக்கு கொண்டு செல்லும் பணிகளை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கவுள்ளோம். நிலவின் இரவை அவை தாங்கி மீண்டுவரும் என நம்புகிறோம்” என்றார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், “ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக விண்ணில் அதன் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட இத்தருணம் இந்தியாவுக்கு ஒரு சூரிய ஒளிப் பாய்ச்சல் (சன் ஷைன்) தருணம்” என்று கூறினார். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்ததோடு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பாராட்டுகளை உரித்தாக்கினார். தொடர்ந்து பேசிய அவர், ஆதித்யா-1 திட்ட இயக்குநர் நிகர் சாஜி, திட்டத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
ஆதித்யா-1 திட்ட இயக்குநர் நிகர் சாஜி தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த ஷேக் மீரான்- சைதுன் பீவீ தம்பதியின் 3-வது மகள் நிகர் சாஜி. நிகர் சாஜி செங்கோட்டை அரசு ஆரியநல்லூர் பள்ளியில் ஆரம்பக் கல்வியைத் தொடங்கி, ஆறாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செங்கோட்டை எஸ்ஆர்எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். 12-ம் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்று, திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியில் இளங்கலையும், பிட்ஸ் நிறுவனத்தில் முதுகலையும் படித்தார். 1987-ல் இஸ்ரோவில் பணி கிடைத்தது. கடந்த 36 ஆண்டுகளாக அங்கு பணிபுரிகிறார்.
இந்நிலையில், ஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
சந்திரயான் வெற்றியை தொடர்ந்து, இந்தியா தனது விண்வெளி பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்காக பிரபஞ்சத்தை பற்றிய சரியான புரிதலுக்காக விஞ்ஞான முயற்சிகள் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.