ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் அமலாக்கத்துறையால் கைது!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கனரா வங்கியில் கடன் பெற்று ரூ. 538 கோடி பணமோசடி செய்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை கடந்த 1992ஆம் ஆண்டு நரேஷ் கோயல் தொடங்கினார். இந்திய விமான சேவையில் சுமார் 25 ஆண்டுகள் கடந்து பயணித்து வந்த நிலையில் 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு பெரும் நஷ்டத்தைச் சந்திக்கத் தொடங்கியதால், தனது சேவைகளை படிப்படியாக குறைத்து வந்தது. எனினும், தொடர்ந்து நஷ்டம் காரணமாக கடந்த ஏப்ரல் 2019ஆம் ஆண்டு தனது செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தியது. அதன் பிறகு ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் திவால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கனரா வங்கியிலிருந்து கடன் பெற்று ஜெட் ஏர்வேஸ் அல்லாத வேறு நிறுவனங்களுக்கு பயன்படுத்தி மோசடி செய்ததாக நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவி அனிதா கோயல் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக நரேஷ் கோயல் மற்றும் அவரது மனைவியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை மேற்கொண்டது. பின்னர் அமலாக்கத்துறையும் கனரா வங்கியில் கடன் பெற்று ரூ.538 கோடி பண மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்தது. கனரா வங்கியில் இருந்து கடன் பெற்று மோசடி செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த ஜூலை மாதம் நரேஷ் கோயல் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த வழக்கின் விசாரணைக்காக நரேஷ் கோயல் SFIO எனப்படும் தீவிர மோசடி விசாரணை பிரிவின் தலைமை அலுவகத்திற்கு நேற்று சென்றபோது, அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அமலாக்கத்துறையின் முந்தைய இரண்டு சம்மன்களை ஏற்று நரேஷ் கோயல் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமலாக்கத்துறையினர் நீண்ட நேரம் அவரிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 74 வயதான நரேஷ் கோயல், மும்பையில் உள்ள சிறப்பு PMLA நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.