இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்க பாஜக முயற்சிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
“Speaking for INDIA” என்ற தலைப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் ஆடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆடியோ பதிவு http://speaking4india.com என்ற இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. “Speaking for INDIA”என்ற தலைப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ஆடியோவில் பேசியதாவது:-
இந்தியாவுக்காக எல்லோரும் பேசியாக வேண்டும் என்ற கட்டாயத்தில் நாம் உள்ளோம். காலம் காலமாக இந்திய மக்கள் போற்றி பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தை சிதைத்து, இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பையே சிதைக்க பாஜக முயற்சிக்கிறது. ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளாகியும் எந்த வாக்குறுதியையும் பாஜக நிறைவேற்றவில்லை. ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலன் என்பது, சில பேரின் நலனாக சுருங்கிவிட்டது. குஜராத் மாடல் எனக் கூறி ஆட்சிக்கு வந்தார்கள்; தற்போது அது குறித்து பேசுவதே இல்லை. அரசு நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படுகின்றன. வீடு இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள் என்ற பாஜகவின் வாக்குறுதி என்ன ஆனது?.
கூட்டாட்சி தத்துவத்திற்கு மக்களாட்சியின் மகத்துவத்திற்கு பங்கம் வரும் போது அதை தடுக்க திமுக முதலில் முன்வரும். மாநில அரசுகளுக்கு முறையாக மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. ஜி.எஸ்.டி மூலம் மாநிலங்களுக்கான வரி வருவாய் பறிக்கப்படுகிறது. காலம் காலமாக இந்திய மக்கள் போற்றி பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு சிதைக்கப்படுகிறது. மாநிலங்களை அழிக்கும் நோக்கில் பாஜக செயல்பட்டு வருகிறது. எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் ஆட்சியாக மத்திய பாஜக ஆட்சி அமைந்துள்ளது. பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது. மத்திய அரசால் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு இழக்கும் நிதி அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு எந்த திட்டங்களையும் மத்திய அரசு கொண்டுவரவில்லை. வஞ்சிக்கும் பாஜகவை வீழ்த்துவோம்! இந்தியாவை மீட்டெடுப்போம்!. இவ்வாறு அவர் பேசினார்.