நீங்கள் எப்படி கம்யூனிசத்தை ஒரு தத்துவமாக பார்க்கிறீர்களோ, அதேபோல நான் அம்பேத்கரை ஒரு தத்துவமாகப் பார்க்கிறேன் என இயக்குநர் பா.ரஞ்சித் பேசியுள்ளார்.
கோவையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் “பாபாசாகேப் டாக்டர். அம்பேத்கரை அறிவோம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பா.ரஞ்சித் பேசியதாவது:-
நான் ஒரு அம்பேத்கரிஸ்ட். இது எனது அடையாளம். இதை சொல்வதில் எனக்கு எந்தச் சிக்கலுமில்லை. நீங்கள் எப்படி கம்யூனிசத்தை ஒரு தத்துவமாக பார்க்கிறீர்களோ, அதேபோல நான் அம்பேத்கரை ஒரு தத்துவமாகப் பார்க்கிறேன். பெரியாரை நாங்கள் எந்த விதத்திலும் எதிரியாக பார்க்கவில்லை. பெரியாரிஸ்ட் என்று பலரும் சொல்லும்போது, நாம் ஏன் அம்பேத்கரிஸ்ட் என சொல்லக்கூடாது? சாதிக்கு எதிராக தொடர்ந்து போராடுபவர்கள் தலித்கள் தான். பா.ரஞ்சித், தனி பாதையில் சென்று ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிறார் என்று சொல்கிறார்கள். ஆம், பொது அமைப்புகளில் எங்களுக்கான பங்கு கிடைக்கும் வரை நாங்கள் தனி அடையாளத்தோடு தான் செல்வோம்.
கோகுல் ராஜ் படுகொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையே முதலில் தவறாக பதியப்பட்டது. கோகுல் ராஜ் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்ததில் மகிழ்ச்சி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எளிதாக வெளியில் வருகிறார்கள். வட மாவட்டங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடக்கூடிய தலைவர்கள் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் மேற்கு மாவட்டங்களில் அம்பேத்கர் சிலை கூட பெரும்பாலும் இல்லை என்பது வருத்தமளிக்கிறது. அம்பேத்கரைப் பற்றி அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். அம்பேத்கர் ஒரு சமூகத்திற்கான தலைவர் அல்ல, அவர் எல்லோருக்குமானவர். அம்பேத்கரை முன்னிலைப்படுத்துவதையே ஒரு குறிப்பிட்ட சாதிய அரசியலாக எடுத்துக்கொள்கிறார்கள். அம்பேத்கர் அனைவருக்குமானவர். அனைவருக்காகவும் உழைத்துள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.