‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ இந்திய ஒன்றியம் மீது தொடுக்கப்படும் தாக்குதல்: ராகுல்

ஒரே நாடு ஒரே தேர்தல் செயல்முறை இந்திய ஒன்றியத்தின் மீதும் அதன் மாநிலங்கள் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்தைச் செயல்படுத்த மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது. குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 8 உறுப்பினர்கள் கொண்ட உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் அதீர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரிஷ் சால்வே, மத்திய ஊல் தடுப்பு அமைப்பின் முன்னாள் ஆணையர் சஞ்சய் கோத்தாரி, நிதிக்குழுவின் முன்னாள் தலைவர் என். கே. சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். அதேபோல வரும் 18ஆம் தேதி முதல் 5 நாட்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “இந்தியா எனும் பாரதம், மாநிலங்களைக் கொண்டதோர் ஒன்றியமாக இருக்கும்” என்ற அரசியலமைப்பின் பிரிவை சுட்டிக்காட்டி, “ஒரே நாடு ஒரே தேர்தல்” செயல்முறை இந்திய ஒன்றியத்தின் மீதும் அதன் மாநிலங்கள் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல்” என்று விமர்சித்துள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 1, இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என குறிப்பிடுகிறது. ஆனால், இந்திய ஒன்றியம் என குறிப்பிடுவதை பாஜக தலைவர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இந்தச் சூழலில், இந்திய ஒன்றியம் என ராகுல் காந்தி குறிப்பிட்டிருப்பது கவனிக்கப்படுகிறது.