ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 2-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலம் கடந்த 2-ம் தேதி 11.50 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் தீப்பிழம்பை கக்கியப்படி, 1,480 கிலோ எடை கொண்ட ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தை சுமந்து கொண்டு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பூமியில் இருந்து புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து ‘ஆதித்யா எல்1’ விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து சென்றது. பின்னர் புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை விண்கலம் தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தின் புவி சுற்று வட்டப்பாதை உயரம் 2-வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 282 கி.மீ x 40,225 கி.மீ சுற்றுவட்டப்பாதையில் தற்போது ஆதித்யா விண்கலம் சுற்றி வருகிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்கலத்தை அடுத்த சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தும் நடவடிக்கை செப்.10-ந் தேதி மேற்கொள்ளப்படும் என்றும் ஆதித்யா எல்-1 விண்கலம் நல்ல முறையில் செயல்பட்டு வருகிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.