இலாக்கா இல்லாத அமைச்சர்: செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாதா அமைச்சராக தொடர்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.

போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது. இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. இதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில்தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வந்தனர். ஜூன் 13ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடந்தது. இந்த சோதனையின் அடிப்படையில்தான் செந்தில் பாலாஜி கைதும் செய்யப்பட்டார். அதன்பின் நீண்ட சட்ட போராட்டத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 5 நாள் அமலாக்கத்துறை காவல் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 3000பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

ஒரு பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார். இதை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இன்னொரு பக்கம் அமைச்சர் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாதா அமைச்சராக தொடர்வதை எதிர்த்து வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கிற்கு இடையில் இலாக்கா இல்லாத அமைச்சராக உள்ளார். இதை எதிர்த்து ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி., ஜெயவர்த்தன் ஆகியோர் கேஸ் போட்டு இருந்தனர். வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனுக்கள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிசேலவலு அமர்வு இன்று தீர்ப்பளிக்கிறது.