ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தில் நிறைய பிரச்சினைகள் உள்ளதாக அன்புமணி ராமதாஸ் கூறினார்.
ஈரோட்டில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி கடந்த 6 நாட்களாக நடைபெற்றது. இதன் இறுதி போட்டி நேற்று நடந்தது. தமிழ்நாடு இறகு பந்து சங்க தலைவரும், பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்துகொண்டு பேட்மிண்டன் விளையாடி போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டி முடிந்த பிறகு வெற்றி பெற்ற அணிகளுக்கு அவர் பரிசுகளையும் வழங்கினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
தாமிரபரணி ஆற்றுடன் காவிரி ஆற்றை இணைப்பது மிக மிக அவசியமானது. காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. எனவே காவிரி படுகையில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ்., ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய 4 அணைகளையும் கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டில் இருந்து பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் 10 தடுப்பணைகள் கேட்டோம். ஆனால் 10 மணல் குவாரிகளை அறிவித்து இருக்கிறார்கள். மணலை கொள்ளையடிக்கவே தடுப்பணைகளை கட்ட மறுக்கிறார்கள்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தில் ஏதார்த்தமான பிரச்சினைகள் நிறைய உள்ளன. ஒரே நாளில் நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி மன்றங்களுக்கு தேர்தல் நடத்துவது குறித்து சாத்திய கூறுகள் உள்ளதா? என்று பார்க்க வேண்டும். தேர்தல் ஆணையத்துக்கு கூடுதலாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தேவைப்படும். முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை பொறுத்து எங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம். முன்கூட்டியே தேர்தல் வந்தாலும் சந்திக்க பா.ம.க. தயாராக உள்ளது. கூட்டணி தொடர்பாக விரைவில் அறிவிப்போம். தமிழகத்தில் தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை.
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி அவரது கருத்தை தெரிவித்திருந்தார். அதற்கு எதிர் கருத்தை பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர். இது அவர்கள் இருவருக்குமான பிரச்சினை. நீட் தேர்வு என்பதே தேவையில்லாதது. தமிழ்நாட்டில் மும்முனை தாக்குதல்களான மது, சூது, போதையால் இந்த தலைமுறையினர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை சட்டம் கொண்டு வந்ததால் தற்போது தற்கொலைகள் குறைந்து உள்ளன. இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.