கடந்த ஒரு மாதத்தில் தென் தமிழகத்தில் 21 வன்முறை கொலைகள் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் கூலிப்படையின் வன்முறை கலாச்சாரம் தலைதூக்கியுள்ளதாக தெரிவித்தார்.
பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 2-ம் கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் நேற்று தொடங்கினார். இதற்காக அவர் நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அவருக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் சசிகலா புஷ்பா, தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் பா.ஜனதா நிர்வாகிகள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பாளையங்கோட்டையில் நடந்த கொலை வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டு உள்ளார். அதற்குள் பல்லடத்தில் பா.ஜனதா நிர்வாகி மோகன்ராஜ் மற்றும் அவருடைய உறவினர்கள் என 4 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இரண்டுக்குமே தி.மு.க.தான் காரணம். இங்கு ஜெகனின் வளர்ச்சி பிடிக்காமல் கொலை செய்துள்ளனர். அங்கு தமிழகத்தை குடிகார மாநிலமாக மாற்றியதன் காரணமாக படுகொலை நடந்துள்ளது. தமிழத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. அரிவாள் மட்டும்தான் ரோட்டில் இருக்கிறது. போலீசின் லத்தியும் துப்பாக்கியும் குறைவாக இருக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவுக்காக பேசுவதற்கு முன்பாக தமிழகத்தை பற்றி பேச வேண்டும்.
உதயநிதி பேச்சு மோடி சமூகம் குறித்து ராகுல்காந்தி பேசியது போன்று, சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசி உள்ளார். வடஇந்தியாவில் எப்படி ராகுல்காந்தி உள்ளாரோ, அதேபோன்று தென்னிந்தியாவுக்கு உதயநிதி ஸ்டாலின் உள்ளார். எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வரலாறு காணாத தோல்வியை சந்திக்க போகிறது. உதயநிதி ஸ்டாலின் பேச்சு, இந்தியா கூட்டணியின் 5 சதவீத வாக்குகளை குறைத்துள்ளது.
தமிழகத்தின் தைரியமான அரசியல்வாதிகளில் ஒருவரான சீமான், ஒரு பெண் புகார் கொடுத்தவுடன் பயந்து விட்டார். நாங்களும் தி.மு.க.வும் பங்காளி என்கிறார். புகார் கொடுத்த பிறகு சீமான் 2.0 ஆக மாறிவிட்டார். இதனால் அவர் மீது வைத்து இருந்த மரியாதை குறைந்து விட்டது. அவர் தி.மு.க.வை பங்காளி என்று கூறுவார் என்று நினைத்து பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
பாளையங்கோட்டை மூளிக்குளம் பகுதியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் ஜெகன் கடந்த 30-ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் பிரபுவை கைது செய்யக்கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து 5 நாட்களாக போராடி வந்த நிலையில், நேற்று முன்தினம் காவல் நிலையத்தில் பிரபு சரணடைந்தார். இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த ஜெகனின் உடலை உறவினர்கள் நேற்று பெற்றுக்கொண்டனர். திருநெல்வேலிக்கு வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜெகனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, ஜெகனின் உடலுக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
ஜெகன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான திமுக சேர்மனின் கணவரை கைது செய்யாமல் உடலை வாங்க மாட்டோம் என்று போராடினோம். 5 நாள் போராட்டத்துக்குப்பின் திமுக பிரமுகர் சரணடைந்துள்ளார். அப்பகுதியில் பாஜகவை வளர்த்தார் என்ற ஒரே காரணத்துக்காக கூலிப்படையை வைத்து ஜெகனை கொலை செய்துள்ளனர். சரணடைந்த திமுக பிரமுகர் மீது ஏற்கெனவே 16 கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 96 வழக்குகள் இருப்பதாக சொல்கிறார்கள். இந்தளவுக்கு தைரியம் அவருக்கு எங்கே இருந்து வந்தது? கொலை செய்யப்பட்ட ஜெகனின் தாய்க்கு வீடு கட்டி கொடுப்பதாக உறுதி கொடுத்துள்ளேன். அது பாஜகவின் கடமை.
பல்லடத்தில் ஒரே வீட்டில் 4 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டுமுன் மது அருந்த வேண்டாமென கூறியதால் இந்த கொலை நடைபெற்றுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் தென் தமிழகத்தில் 21 வன்முறை கொலைகள் நடந்துள்ளன. தமிழகத்தில் எந்தளவுக்கு கூலிப்படையின் வன்முறை கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது என்பதை இது வெளிக்காட்டுகிறது. குடி, கஞ்சா புழக்கம் அதிகமாகிவிட்டது. தென் தமிழகத்தில் வன்முறையை தடுக்க வளர்ச்சியைக் கொண்டு வர வேண்டும். வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து 2-வது கட்ட பாதயாத்திரையை தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட பொட்டல்புதூரில் அண்ணாமலை நேற்று மாலையில் தொடங்கினார். மதியம் முதலே மிதமான மழை பெய்தபோதும் அங்கு திரண்டு இருந்த திரளான பா.ஜ.க.வினருடன் அண்ணாமலை பாதயாத்திரையாக புறப்பட்டார். கொட்டும் மழையிலும் அவருக்கு ஏராளமானவர்கள் பூக்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பொட்டல்புதூரில் முக்கிய வீதிகளின் வழியாக சென்ற அண்ணாமலை தொடர்ந்து திருமலையப்பபுரம், ரவணசமுத்திரம் விலக்கு, முதலியார்பட்டி வழியாக சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்து கடையத்துக்கு வந்தார். கடையம் பாரதிநகரில் தேவேந்திரகுல வேளாளர் நலச்சங்கம் சார்பில் ஏர்கலப்பையை அண்ணாமலைக்கு பரிசாக வழங்கினர். பின்னர் கடையம் மெயின் பஜார் வழியாக லாலாகடை முக்கு பகுதிக்கு சென்ற அண்ணாமலை பா.ஜனதா கட்சி கொடியேற்றினார். இரவில் தென்காசியில் பாதயாத்திரையை முடித்த அண்ணாமலை, குற்றாலத்தில் தங்கினார். பாதயாத்திரையில் அவருடன் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.