வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் அகமதுவை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சென்னையில் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கேரளா மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் அகமது, போலி ஆவணங்கள் மூலமாக நேபாள நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது, சென்னையில் அவரை சுற்றி வளைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அவரை சென்னையில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐ.எஸ் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டி, பயங்கரவாத தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ் தலைவர் சையது நபில் அகமது பல வாரங்களாக தேடப்பட்டு வந்த நிலையில், அவர் தமிழ்நாடு, கர்நாடகா என மாறி, மாறி தலைமறைவாக இருந்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் தான் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் சென்னையில் வைத்து கைது செய்துள்ளனர். அவரை பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரிடமிருந்து பல்வேறு ஆவணங்கள், டிஜிட்டல் பொருட்களையும் என்.ஐ.ஏ அதிகாரிகள் பறிமுதல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளாது.
கடந்த ஜூலை மாதம், தமிழ்நாட்டின் சத்தியமங்கலம் அருகே ஆஷிப் என்ற தீவிரவாதியை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.