நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டியவை குறித்து பிரதமர் மோடிக்கு சோனியா கடிதம்!

வரும் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெற இருக்கும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரின் நோக்கம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அத்துடன், 9 விஷயங்களைப் பட்டியலிட்டு, அவை குறித்து இந்தக் கூட்டத் தொடரில் விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

செப்.18-ம் தேதி முதல் ஐந்து நாட்களுக்கு சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரை நீங்கள் கூட்டியுள்ளீர்கள். இந்தச் சிறப்புக் கூட்டத் தொடர் குறித்து மற்ற அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசிக்கவில்லை என்பதை நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். சிறப்புக் கூட்டத் தொடர் கூட்டப்படுவதன் நோக்கம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. அந்த ஐந்து நாட்களும் அரசின் பணிகளுக்கு ஒதுக்கப்படும் என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவான அக்கறையையும், முக்கிய பிரச்சினைகளையும் குறித்து கேள்வி எழுப்ப இது வாய்ப்பு அளிக்கும் என்பதால், இந்தச் சிறப்புக் கூட்டத் தொடரில் கண்டிப்பாக கலந்து கொள்ள இருக்கிறோம். ஆக்கபூர்வமான ஒத்துழைப்பின் அடிப்படையில் உரிய விதிமுறைகளின் கீழ் இந்தப் பிரச்சினைகள் குறித்து விவாதம் நடைபெறும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறி 9 பிரச்சினைகளை பட்டியலிட்டுள்ளார். அவை:

* அத்தியவாசிய பொருள்களின் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை, சமத்துவமின்மை மற்றும் சிறு, குறு தொழில்கள் மீதான அழுத்தம் ஆகியவற்றுடன் கூடிய தற்போதைய பொருளாதார நிலை.

* விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகளுக்கு எம்எஸ்பி தொடர்பாகவும், விவசாயிகளின் பிற கோரிக்கைகள் தொடர்பாகவும் இந்திய அரசு கொடுத்த வாக்குறுதிகள்.

* அதானி குழுமத்தின் அனைத்து செயல்பாடுகளையும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை.

* மணிப்பூர் மக்கள் தொடர்ந்து சந்தித்து வரும் வேதனை மற்றும் அம்மாநிலத்தின் அரசு இயந்திரத்தின் தோல்வி மற்றும் சமூக நல்லிணக்க பாதிப்பு குறித்து.

* ஹரியாணா போன்று பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் வகுப்புவாத வன்முறை குறித்து.
லடாக் மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள நமது எல்லைகளை சீனா தொடர்ந்து ஆக்கிரமித்து இந்திய இறையாண்மைக்கு சவால் விடுவது பற்றி.

* சாதிவாரி கணக்கெடுப்பின் அவசரத் தேவை.

* மத்திய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளில் ஏற்படும் விரிசல்.

* சில மாநிலங்களில் வெள்ளம் மற்றும் சில மாநிலங்களில் வறட்சி ஏற்படுத்தியுள்ள இயற்கைப் பேரிடர் பாதிப்புகள். இவ்வாறு சோனியா காந்தி தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.