உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி ஆளுநருக்கு சு.சாமி கடிதம்!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தமிழக ஆளுநர் ஆர்என் ரவிக்கு பரபரப்பான கடிதத்தை எழுதியுள்ளார்.

சென்னையில் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சில நாட்களுக்கு முன்பு சனாதன ஒழிப்பு என்ற பெயரில் மாநாடு நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலினின் மகனும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார். அப்போது, ‛‛இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்காக எனது வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அதேபால் தான் சனாதனம்” என பேசியிருந்தார்.

உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேசிய கருத்துகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அமைச்சர் அமித்ஷா முதல் பாஜகவினர் அனைவரும் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்நிலையில் தான் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆளுநர் ஆர்என் ரவிக்கு பரபரப்பான கடிதம் எழுதியுள்ளார். 2 பக்கங்கள் கொண்ட அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை நம்பும் மக்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க வகையில் பேசியுள்ளார். அதனை உங்களின் கவனத்துக்கு கொண்டு வருவதற்காக தான் இந்த கடிதத்தை எழுதியுள்ளேன். உதயநிதி ஸ்டாலின், ‛‛டெங்கு, மலேரியா, கொரோனா வைரஸ் உள்ளிட்டவற்றை ஒழிப்பது போல் சனாதனத்தையும் ஒழிக்க வேண்டும் என பேசியுள்ளார். இவரது இந்த பேச்சு என்பது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 153 ஏ (மதம், இனம், மொழி அடிப்படையில் இருபிரிவினர் இடையே பகைமையை ஊக்குவித்தல்), 153 பி(தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பேசுதல்), 295ஏ (வேண்டுமென்றே குறிப்பிட்ட மத உணர்வு, நம்பிக்கை அல்லது மதத்தை அவமதித்தல்) 298 (மத உணர்வுகளை வேண்டுமென்றே புண்படுத்துதல்), 505(குறிப்பிட்ட வழிபாடு, மதச்சடங்குகள் பற்றி தவறான கருத்தை பேசுதல்) உள்ளிட்ட பிரிவின் குற்றமாகும். இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது கிரிமினல் நடவடிக்கையை எடுப்பதை நோக்கமாக வைத்துள்ளேன்.

அதோடு குற்றம்சாட்டுக்கு உள்ளான இந்த நபர் தமிழகத்தை ஆட்சி செய்யும் அரசில் அங்கம் வகிப்பதோடு, பொதுவான நபராகவும், மக்கள் தொடர்பு மற்றும் அதிக பாலோவர்களை கொண்டுள்ளார். இதனால் அவரது இந்த பேச்சு என்பது மில்லியன் கணக்கான மக்களை சென்றடைந்துள்ளதோடு சனாதன தர்மத்துக்கு அச்சுறுத்தும் சூழலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவரது இந்த பேச்சு என்பது தமிழ்நாட்டில் சனாதன தர்மத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மத்தியில் பயம், மிரட்டல், பாதுகாப்பற்ற தன்மையை ஏற்படுத்தி உள்ளது. அதோடு மக்கள்தொகையில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை ஒரே மாதிரியாகக் கருதி களங்கப்படுத்தி அவர்களுக்கு எதிராக வன்முறை மற்றும் கலவரங்களை தூண்டுவதற்கான வெறுப்புகளை தூண்டுவதற்கான சூழலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கையை தொடங்குவதற்கு உங்களின் அனுமதி என்பது தேவை. அதனை வழங்க கோருகிறேன்” என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவர் சுப்பிரமணியன் சுவாமி மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திமுக ஆட்சியை தமிழ்நாட்டில் 1991ல் கலைத்ததை நினைவுப்படுத்தி முதல்வர் ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்து இருந்தார். இதுதொடர்பாக சுப்பிரமணியன் சாமி, ‛‛அமைச்சராக இருக்கும் ஸ்டாலின் மகன்(உதயநிதி ஸ்டாலின்) மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதிகோரி தமிழக ஆளுநருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். மீண்டும் ஒருமுறை அவர் சனாதன தர்மத்தை இழிவுபடுத்தினால் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்வதற்கான வேலையை செய்வேன். முன்னதாக கடந்த 1991ல் கருணாநிதியின் அரசை தமிழகத்தில் டிஸ்மிஸ் செய்ய நடவடிக்கை எடுத்து இருந்தேன்” என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.