தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி சனாதனம் என்றால் என்னவென்று தெரியாமல் விளையாட்டுத்தனமாக பேசியுள்ளார் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மத உணர்வுகளைப் பற்றிப் பேசியது தவறு. அதற்காக அவரது தலைக்கு விலை பேசியது அதைவிட காட்டுமிராண்டித்தனம். விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானம் என்றால் என்று தெரியாமல் விளையாட்டாகப் பேசியுள்ளார். இந்து மதம், கோயில், கடவுள் மற்றும் சமஸ்கிருதம் குறித்து உதயநிதியின் தாத்தாவும், மறைந்த முதல்வருமான கருணாநிதியும், உதயநிதியின் தந்தையும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆகியோர் இழிவாக பேசுவார்கள். ஆனால் அவர்களது வீட்டிலுள்ள பெண்கள் கோயிலிகளைச் சுற்றி வலம் வருவதும், அங்கப் பிரதட்சணம் செய்வதும், புரோகிதர்கள், அர்ச்சகர்களை வீட்டுக்கு அழைத்து, அவர்களது காலில் விழுந்து மரியாதை செய்வார்கள். உள்ளொன்றும், வெளியென்றும் வைத்து வேஷம் போடுவதைப் போலவே அரசியலிலும் அவர்கள் வேஷம் போடுகிறார்கள்.
விளையாட்டுத் துறை அமைச்சர் விளையாட்டுப் பிள்ளை போல் பேசியதை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. உதயநிதியின் தாத்தா, தந்தை ஆகியோர் முதல்வராக இருந்தும், அமைச்சர் பதவியில் உள்ள இவர், அரசியல் நாகரிகம் தெரியாமல், தேவையில்லாமல், மதங்கள் குறித்தும், மத உணர்வுகள் குறித்தும் பேசுவது தவறு என்பதுகூட அவருக்குத் தெரியவில்லை. இதுவே தமிழகத்தில் வேறு யாராவது ஆட்சிப் பொறுப்பில் இருந்திருந்தால், உதயநிதி மீது வழக்கு தொடர்ந்திருப்பார்கள். அவர்கள் ஆட்சியில் இருப்பதால், வழக்குத் தொடராமல் விட்டுவிட்டார்கள். எனவே, சனாதனத்தை பற்றிப் பேசியதை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திரும்பப் பெற வேண்டும். உதயநிதி பேசியது தவறு என்றும், அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்றும் இண்டியா கூட்டணியிலுள்ள மமதா பானர்ஜி கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் கடந்த ஓணம் பண்டிகையின்போது, மலையாளத்தில் வாழ்த்து கூறியுள்ளார். இதன்மூலம் பிராமணர்களுக்கு மறைமுகமாக வாழ்த்து கூறியிருப்பது தெரிய வருகிறது. திமுகவினர் இரட்டை வேடம் போடுகிறார்கள். கடவுள் பக்தியைக்கூட துணிந்துக் காட்டத் தைரியமில்லாதவர்கள். ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு மக்கள் வரிப் பணத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதுதான் அவர்களது ஒரே எண்ணம்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பச்சோந்தி போல் தற்போது பேசி வருகிறார். மத்திய அரசு எது செய்தாலும், மக்களின் கருத்தைப் பெற்று அதன்படி நிறைவேற்ற வேண்டும். இந்தச் சட்டத்தை வரும் தேர்தலுக்குள் கொண்டு வர முடியாது. பழனிசாமி தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பற்றிப் பேசுவது சாத்தான் காதில் வேதம் ஓதுவது போல் உள்ளது. முதலில் கோடநாட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளைப் பற்றி அரசு கண்டுப்பிடிக்க வேண்டும் என பழனிசாமி குரல் கொடுக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பது வரலாறாகும்.
குறுவைப் பயிரிட்டுள்ள கடைமடைப் பகுதி காய்ந்து வருவதால், தமிழக அரசு இந்தப் பகுதியை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து அவர்களுக்குரிய நிவாரணங்களை வழங்க வேண்டும். ஒருவேளை தேர்தல் நேரத்தில் ஒ.பன்னீர்செல்வம், இபிஎஸ் கூட்டணிக்குச் சென்றால், நட்பு ரீதியாக நீங்கள் அங்கு இருங்கள், நாங்கள் தனித்து போட்டியிடுகிறோம் எனக் கூறிவிடுவேன்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். எடப்பாடி பழனிச்சாமி உள்ள கூட்டணியில் இடம் பெற வேண்டுமா என என்னிடம் எங்களது நிர்வாகிகள், தொண்டர்கள் கேட்கின்றனர். அதனால் தனித்து நிற்பது சாலச்சிறந்தது என்ற முடிவை எடுக்கலாம். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் சாத்தியமில்லை. செலவைக் குறைப்பதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்த வேண்டும் எனக் கூறினாலும், ஏற்கனவே தேர்தல் நடைபெற்ற மாநிலங்களில் செலவு அதிகமாகும். எனவே மத்திய அரசு தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதால் எதையும் செய்யக்கூடாது. மக்களிடம் கருத்து கேட்ட பிறகு செய்ய வேண்டும்.
என் மீதான அமலாக்கத் துறை வழக்கில் நீதிமன்றம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதன்படி நடந்து கொள்வேன். என் மீது தவறு இல்லை என்பதால் அபராதம் கட்டக்கூடாது என போராடி வருகிறேன். நீதிமன்ற உத்தரவுப்படி நடந்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.