தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோரது பதவிகளை பறிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தமிழ்நாடு பாஜகவினர் மனு கொடுத்துள்ளனர்.
சென்னையில் சனாதன ஒழிப்பு மாநாட்டை இடதுசாரிகளின் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தியது. இம்மாநாட்டில் தமிழ்நாடு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்மாநாட்டில்தான் சனாதனத்தை எதிர்க்கக் கூடாது; ஒழித்தாக வேண்டும்; சனாதனத்தை திராவிட இயக்கம் ஒழித்து வருகிறது என பட்டியல் போட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது அமைச்சர் சேகர்பாபுவும் மேடையில் இருந்தார். தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு பாஜகவினரால் இந்தியாவின் முதன்மை பிரச்சனையாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் தமிழ்நாடு பாஜகவினர் ஒரு மனுவை கொடுத்தனர். இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி பிரமாணம் எடுத்த போது, என்னவெல்லாம் உறுதிமொழி எடுத்தாரோ அதற்கு எதிர்த்த முறையில், உதயநிதி ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய வன்முறை மிகுந்த பேச்சு “ஒழிப்போம்” என்பது. அதன் தொடர்ச்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், காஞ்சி சங்கர மடத்தை இடிப்போம் என்றார். செப்டம்பர் 2-ந் தேதி உதயநிதி பேசினார்; செப்டம்பர் 4-ந் தேதி திருமாவளவன் பேசுகிறார். காஞ்சி மடத்தை இடித்து விடுவோம் என திருமாவளவன் சொல்வதற்கான துணிவு எப்படி வந்தது? அந்த எண்ணம் எப்படி வந்தது? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒழிப்போம் என சொன்னதால், திருமாவளவன் இடிப்போம் என பேசினார். இது போல நஞ்சை விதைத்த உதயநிதி ஸ்டாலின், அமைச்சராக இருக்க தகுதி இல்லை. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஆளுநரிடம் மாநில தலைவர் அண்ணாமலையின் கடிதத்தைக் கொடுத்திருக்கிறோம்.
அதேபோல இந்து சமயநிலை அறநிலையத்துறை தொடர்பாகவும் ஒரு கடிதம் கொடுத்தோம். இங்கு இருக்கிற அதிகாரிகள் கூட, பணியாற்றும் போது இந்துக்களாக இருக்க வேண்டும்; இந்துக்களுக்கு எதிராகவோ, இந்து மதத்துக்கு எதிராகவோ செயல்படக் கூடாது என உறுதிமொழி எடுக்க வேண்டும். அதிகாரிகளே அப்படி பொறுப்பாக இருக்கும் போது “இந்துமத ஒழிப்பு” மாநாட்டில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்றிருக்கிறார். அது தவறு என சொல்லி ஆளுநரிடம் மனு கொடுத்துள்ளோம். அமைச்சர் சேகர் பாபு பதவியையும் பறிக்க வேண்டும் என மனு கொடுத்திருக்கிறோம். இவ்வாறு கரு.நாகராஜன் கூறினார்.