இலங்கையில் 2019-ல் 269 பேரை பலி கொண்ட ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதலானது மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் அதிகாரத்தைக் கைப்பற்ற, இலங்கை உளவுத்துறை நடத்திய தாக்குதல் என இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி தொகுப்புக்கு முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
2019-ம் ஆண்டு இலங்கையின் தேவாலயங்களில் ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் கூடி இருந்தனர் . அப்போது தேவாலயங்கள் மீது தற்கொலைப்படை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 269 பேர் பலியாகினர். உலகையே அதிரவைத்தது இந்த தற்கொலைப்படைத் தாக்குதல் சம்பவம். இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் காரணம் என கூறப்பட்டது. இத்தாக்குதல் சம்பவம் தொடர்பான ஆய்வு செய்து இங்கிலாந்தின் சேனல் 4 டிவி அண்மையில் செய்திகளை வெளியிட்டிருந்தது. அதில் இலங்கையில் ராஜபக்சே குடும்பம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே அந்நாட்டு உளவுத்துறை உதவியுடன் இத்தாக்குதல் நடத்தப்பட்டது அம்பலமானது. இலங்கையில் இது மிகப் பெரிய புயலைக் கிளப்பிவிட்டுள்ளது. மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவின் சேனல் 4 வாக்குமூலம்தான் இத்தனைக்கும் அடிப்படையானது.
இதனைத் தொடர்ந்து கோத்தபாய ராஜபக்சே ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை ஜனாதிபதி பதவியை கைவிட்டு விட்டு வெளிநாட்டு தப்பி ஓடி மீண்டும் நாடு திரும்பி அமைதியாக இருந்து வரும் கோத்தபாய முதல் முறையாக நேற்று அறிக்கை வெளியிட்டார். கோத்தபாய ராஜபக்சே வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
எனக்கு எதிராக சில அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும், நான் பதவியில் இருந்தபோது ரோமன் கத்தோலிக்க சமூகத்திற்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளேன். போர் முடிவுக்கு வந்த பின்னர், மடு தேவாலயத்தின் மறுசீரமைப்பிற்கும் முள்ளிக்குளம் தேவாலயத்தின் புனரமைப்பிற்கும் நான் உதவினேன். புனித பாப்பரசரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளுக்கு நான் உதவியதுடன், விஜயத்தின் ஒருங்கமைப்பு குழுவிற்கும் தலைமை தாங்கினேன். பொலவலனையில் 16 ஆவது ஆசிர்வாதப்பர் கத்தோலிக்க உயர் கல்வி நிறுவனத்தின் கட்டுமானப் பணிகளிலும் நான் முக்கிய பங்காற்றினேன். அக்காலப் பகுதியில் பேரருட்திரு கர்தினாலுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றியுள்ளேன்.
மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே, ஒரு தொழில்முறை இராணுவ அதிகாரி. அனைத்து இராணுவ அதிகாரிகளுமே அரசுக்கு விசுவாசமானவர்கள். 2015 இல் பாதுகாப்புச் செயலாளர் பதவியை விட்டு விலகிய பின்னர் 2019 இல் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேயுடன் எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. 2019 ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள இலங்கை செய்தி நிறுவனத்தின் ஆவணப்படம் பொய்களின் திணிவு ஆகும். என்னை ஜனாதிபதியாக்க பயங்கரவாதிகள் குழு தற்கொலை தாக்குதல் நடத்தியதாக கூறுவது அபத்தமானது. இவ்வாறு கோத்தபாய ராஜபக்சே கூறியுள்ளார்.