குடியரசுத் தலைவர் விருந்துக்கு எதிர்க்கட்சித் தலைவரை அழைக்காதது, 60 சதவீத மக்களின் தலைவரை மோடி அரசுக்கு மதிக்கத் தெரியவில்லை என்பதையே காட்டுகிறது என்று ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.
ராகுல் காந்தி ஒருவார சுற்றுப்பயணமாக ஐரோப்பா சென்றுள்ளார். இந்த நிலையில் பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை ராகுல் காந்தி சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எதிர்க்கட்சித் தலைவரை அழைப்பதில்லை என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர். 60 சதவீத மக்கள் தொகையின் தலைவரை அவர்களுக்கு மதிக்கத் தெரியவில்லை என்பதையே இது காட்டுகிறது. இதற்கு பின்னால் என்ன சிந்தனை இருக்கிறது?” என்றார்.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது ஜி20 பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த ராகுல்காந்தி, “ஜி20 ஒரு முக்கியமான உரையாடலாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்தியா அதனை நடத்துவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது” என்றார். இந்தியாவில் அரசு அமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறது என்ற தனது பேச்சை மீண்டும் அவர் வலியுறுத்தினார்.
மணிப்பூர் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “மணிப்பூரில் ஜனநாயக உரிமைகள், நல்லிணக்கம், மக்களிடம் அமைதி நிலவவேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்தியாவில் ஜனநாயக அமைப்புகள், அரசு நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இந்தத் தாக்குதல்கள் மக்களை வழிநடத்தும் குழுவினரால் நடத்தப்படுகின்றன. இந்தியாவைப் பற்றிய சிறிதளவு புரிதல் உள்ள அனைவராலும் இதனை உணர்ந்து கொள்ள முடியும். இந்தியாவில் ஜனநாயகத்தைக் காக்க நடக்கும் போராட்டம் எங்களுக்கானது. நிறுவனங்களின் சுதந்திரத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவோம். எதிர்க்கட்சிகள் அதைச் செய்யும்” என்றார்.
பாரத் பெயர் சர்ச்சை குறித்த கேள்விக்கு, “அது ஒரு திசைமாற்றும் தந்திரம். நாங்கள் எங்கள் கூட்டணிக்கு (எதிர்க்கட்சிகளின்) இண்டியா என்று பெயர் வைத்தது ஒரு நல்ல சிந்தனை. ஏனெனில் அது நாங்கள் யார் என்பதை உணர்த்துகிறது. நாங்கள் எங்களை இந்தியாவின் குரலாக கருதுகிறோம். இது பிரதமர் மோடியை நாட்டின் பெயரை மாற்ற எண்ணும் அளவுக்கு பாதித்துள்ளது. ஒவ்வொரு முறையும் நாங்கள் அதானி மற்றும் க்ரோனி முதலாளித்துவம் பற்றி பேசும் போதும், பிரதமர் அதனை திசை திருப்பும் வகையில் ஒரு புதிய நாடகத்தினை நடத்துகிறார்” என்று ராகுல் பதில் அளித்தார்.
சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு குறித்த கேள்விக்கு, “நாட்டில் சிறுபான்மையினர் மட்டும் இல்லை, பழங்குடிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டவர்களும் பாகுபாட்டைச் சந்திக்கின்றனர். எங்கள் நாடு மாநிலங்களின் கூட்டிணைப்பு என்று அரசியலைப்பு விவரிக்கிறது. எங்கள் ஒற்றுமையின் முக்கிய அம்சமே அதன் உறுப்பினர்களுக்கு இடையேயான உரையாடல்களே என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் பாஜகவின் பார்வையில் அதிகாரம் மையப்படுத்தப்பட வேண்டும், ஒருமுகப்படுத்தப்பட வேண்டும், வளங்கள் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும் என்று நம்புகிறது. இதனால் உறுப்பினர்களின் ஒற்றுமை மற்றும் நாட்டுமக்கள் ஒடுக்கப்படுகிறார்கள்” என்றார்.
ஜி20 மாநாட்டையொட்டி இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து அளிக்கிறார். இதற்காக ஜனாதிபதி மாளிகை அழைப்பு விடுத்து வருகிறது. ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள இருக்கிறார்கள். இன்று காலை தேவகவுடா, மன்மோகன் சிங் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தேவகவுடா உடல்நலத்தை காரணம் காட்டி பங்கேற்க இயலாது எனக் கூறிவிட்டார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த தகவலை அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய எதிர்க்கட்சி தலைவர் கேபினெட் மந்திரிக்கு சமமானவர் எனவும் குறிப்பிட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அனைத்து கேபினெட் மந்திரிகள், மாநில முதல்வர்கள் ஆகியோர் அழைக்கப்படடுள்ளனர். இந்திய அரசின் அனைத்து செயலாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். மேலும் புகழ்பெற்றவர்கள் விருந்தினர் பட்டியலில் உள்ளனர்.