உதயநிதி ஒரு பரிட்சையாவது எழுதிருக்காரா?: அண்ணாமலை

படித்த அறிவார்ந்த ஒருவருக்குத்தான் கல்வித் துறையை அளிக்க வேண்டும். ஆனால், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு தரப்பட்டுள்ளது. ஏன் அவருக்கு தரப்பட்டது தெரியுமா?. உதயநிதி ஒரு பரிட்சையாவது எழுதிருக்காரா? என்று அண்ணாமலை கூறினார்.

நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் என் மண், என் மக்கள் என்ற பெயரில் பயணம் மேற்கொண்டு வருகிறார். இரண்டாம் கட்டப் பயணத்தில் தற்போது தென் மாவட்டங்களில் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் தேனி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்த போது வேனில் இருந்தபடி பேசிய அண்ணாமலை பேசியதாவது:-

தமிழகத்தில் டாஸ்மாக், வறுமை, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், சாதிய ஏற்றத்தாழ்வுகளே ஒழிக்க வேண்டியவை. ஆனால், உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார். குல தெய்வ வழிபாட்டை ஒழிக்காமல் எப்படி சனாதன தர்மத்தை இந்தியாவில் ஒழிக்க முடியும். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்களாகி நீங்கள் திமுகவை ஒழிக்க வேண்டும். சனாதனத்தை டெங்கு, மலேரியாவுடன் ஒப்பிட்டார் உதயநிதி. திமுகதான் டெங்கு, மலேரியா, கொசு. ஆகவே, திமுகவைத்தான் தமிழகத்தில் ஒழித்துக்கட்ட வேண்டும். திமுக தமிழர்களுக்கு எதிரான கட்சி. எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் திமுகவை தீய சக்தி என்றே கூறி வந்தனர்.

திமுக குடும்பத்தில் பலர் டாக்டர்கள். ஏன் உதயநிதி ஸ்டாலினோ அண்ணா பல்கலைக் கழக செனட் உறுப்பினர். எந்த பரிட்சையில் நீங்கள் பாஸ் செய்தீர்கள். நீங்கள் பரீட்சைக்கு செல்வதை யாராவது பார்த்தார்களா? வாழ்க்கையில் ஏதாவது நுழைவுத் தேர்வு எழுதியிருக்கீங்களா? ஆனால், தமிழகத்தில் நுழைவுத் தேர்வு வேண்டாம் என நெஞ்சை நிமித்திக்கொண்டு பேசுவார்கள். திமுக குடும்பத்தில் நுழைவுத் தேர்வு எழுதிய ஒருவர் இருக்கிறாரா? முதலமைச்சர் கோட்டாவிலும், ஆளுநர் கோட்டாவிலும் படித்துவிடுவார்கள். கல்வியை பற்றி பேச அருகதை இல்லாத கட்சி திமுக.

படித்த அறிவார்ந்த ஒருவருக்குத்தான் கல்வித் துறையை அளிக்க வேண்டும். ஆனால், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு தரப்பட்டுள்ளது. அவருடைய ஒரே தகுதி உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றத் தலைவர் என்பதுதான். முதலில் அன்பில் மகேஸே எங்கு படித்தார் என்ற சந்தேகம் உள்ளது. நீட் தேர்வு நாடகத்தை தூக்கி எறிய வேண்டும். நீட் போராட்டத்தின் போது அழுது நடிக்கிறார் உதயநிதி. இதை படத்தில் நடித்திருந்தால் நல்ல நடிகராகவாவது ஆகியிருக்கலாம். படத்தில் நடிக்கத் தெரியாமல் அங்கிருந்து அரசியலுக்கு வந்து அரசியலும் தெரியாமல் நம்மை தொந்தரவு செய்து வருகிறார் என்றார்.

பின்னர் பங்களாமேட்டில் அண்ணாமலை பேசியதாவது:-

தி.மு.க.வின் வளர்ச்சி என்பது அவர்களின் குடும்பத்தின் வளர்ச்சி. தி.மு.க. வளர்ந்தால் அவர்களின் குடும்பம் வளர்கிறது. 2024-ம் ஆண்டு தேர்தல் என்பது ஒரு சரித்திர தேர்தலாக இருக்கப் போகிறது. இந்தியா உலகத்தின் முதன்மை நாடாக மாறுவதற்கான தேர்தல். இதற்கு முன்பு எத்தனையோ பிரதமர்கள் வந்து இருக்கிறார்கள். அப்போது எல்லாம் இந்தியாவுக்கு உலக அரங்கில் இவ்வளவு பெரிய மரியாதை இல்லை. அப்போது எல்லாம் அமெரிக்கா, இங்கிலாந்து நாட்டிடம் கையேந்தி நின்றோம். இன்றைக்கு உலகத்திற்கு கொடுக்கக்கூடிய நாடாக இந்தியா மாறி இருக்கிறது. டெல்லியில் ஜி20 மாநாடு நடந்து கொண்டு இருக்கிறது. உலகின் முக்கியப் புள்ளிகள் எல்லாம் வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு தெரியும் வருகிற 20 ஆண்டுகள் என்பது இந்தியாவுக்கான ஆண்டுகள். இந்தியாவின் வளர்ச்சி என்பது உலகத்தின் வளர்ச்சி. அப்படிப்பட்ட வளர்ச்சியை பிரதமர் மோடி நமக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறார். இந்த வளர்ச்சியில் தனி மனிதனும் வளர்ந்து இருக்கிறார், இந்தியாவும் வளர்ந்து இருக்கிறது.

தமிழர்களுக்கு எதிரான கட்சி தி.மு.க. ஆட்சியை 29 மாதங்களாக பார்த்துக் கொண்டு இருக்கிறோம். தி.மு.க.வில் சாராய ஆலைகள் வளர்ந்து இருக்கிறது. டாஸ்மாக் வருமானம் வளர்ந்திருக்கிறது. ஏழைத்தாயின் கண்ணீர் அதிகரித்து வருகிறது. அரிவாள்வெட்டு கலாசாரம் அதிகரித்து உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. காவல் துறையின் கையை கட்டிப் போட்டு விட்டார்கள். தமிழகத்தில் கஞ்சா கலாசாரம், டாஸ்மாக், வன்கொடுமை, வறுமை, சாதிய ஏற்றத்தாழ்வை ஒழிக்க வேண்டும். ஆனால், உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிக்கப்போகிறேன் என்கிறார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் யாரை ஒழிக்க வேண்டும் என்றால், தி.மு.க.வை ஒழிக்க வேண்டும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தி.மு.க. என்றால் தீய சக்தி என்றார்கள். தீய சக்திக்கு என்றைக்கும் தமிழ்நாட்டில் இடம் கொடுக்கக்கூடாது என்றார்கள். தி.மு.க. தமிழர்களுக்கு எதிரான கட்சி. நம்முடைய உரிமைகளை எல்லாம் விட்டுக்கொடுக்கக்கூடிய கட்சி.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கும் பட்டியலின சமுதாயத்திற்கும் அரசியல் அதிகாரம் கொடுத்தால் தான் அந்த சமூகம் வேகமாக வளரும். மோடியின் மந்திரி சபையில் 79 அமைச்சர்களில், 20 பேர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் 35 அமைச்சர்களில் 3 பேர் மட்டுமே பட்டியலின, பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர்கள். அதில் இருந்தே எந்த கட்சி பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன மக்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியும். ஆ.ராசா சனாதன தர்மம் என்று பேசுகிறார். மு.க.ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் ஆ.ராசாவை பொதுத்தொகுதியில் நிற்க வைக்க வேண்டும்.

தி.மு.க. வந்த பிறகு 70 ஆண்டுகளில் தமிழகத்தில் சாதி வன்மம் அதிகமாகி இருக்கிறது. தென்தமிழகத்தில் சாதி கலவரம் அதிகமாகி இருக்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் தி.மு.க. மட்டும் தான். மாஞ்சோலை படுகொலையில் 17 தேயிலை தொழிலாளர்கள் தாமிரபரணியில் குதித்து உயிரிழந்தார்கள். போலீஸ் துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கூக்குரலிட்டார்கள். அப்போது கருணாநிதி என்ன சொன்னார் என்றால், நடவடிக்கை எடுத்தால் ஒவ்வொரு போலீஸ் துறையும் ஒவ்வொரு சாதியை சார்ந்தவர்கள். அந்த சாதியினர் தன் மீது கோபித்துக் கொள்வார்கள் என்றார். போலீஸ் துறையில் சாதி எங்கிருந்து வந்தது. ஒரே ஒரு சாதி காக்கி சாதி, போலீஸ் துறையிலும் சாதியை கொண்டு வந்தது கருணாநிதி. நாடார் சமுதாயத்தை கன்னியாகுமரியில் முதன்முதலாக இந்து நாடார், கிறிஸ்தவ நாடார் என்று பேச ஆரம்பித்தது கருணாநிதி. இவ்வாறு அவர் பேசினார்.