பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவி அக்ஷதா மூர்த்தி உடன் சேர்ந்து இன்று டெல்லியில் உள்ள முக்கிய இந்து கோயில் ஒன்றுக்குச் சென்றார்.
தலைநகர் டெல்லியில் இரண்டு நாட்கள் ஜி20 மாநாடு நடைபெறுகிறது. நேற்றும் இன்றும் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள உலகெங்கும் இருந்து தலைவர்கள் டெல்லிக்கு வந்தனர். இதனால் அங்கே வரலாறு காணாத போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் பைடன், கனடா பிரதமர் ட்ரூடோ தொடங்கிப் பல முக்கிய தலைவர்களும் டெல்லிக்கு வருகை தந்துள்ளனர். முதல் நாளான நேற்று பல முக்கிய நிகழ்வுகள் நடந்தன. ஆப்பிரிக்க யூனியன் ஜி20இல் நிரந்தரமாக இணைக்கப்பட்டது.
இந்த ஜி20 மாநாட்டில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தனது மனைவி மனைவி அக்ஷதா மூர்த்தியுடன் கலந்து கொண்டுள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரிட்டன் பிரதமரான பிறகு இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறையாகும். நேற்றைய தினம் கூட ரிஷி சுனக்கை பிரதமர் மோடி கட்டியணைத்து வரவேற்றார். ரிஷி சுனக்கை இந்தியாவின் மருமகனாகவே நாட்டில் பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்து மதத்தைப் பின்பற்றும் ரிஷி சுனக் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கோயிலுக்குச் செல்வதைத் தவறாமல் பின்பற்றி வருகிறார். அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோவிலுக்கு ரிஷி சுனக்- அக்ஷதா மூர்த்தி தம்பதி பிரார்த்தனை செய்ய வந்தனர். இதனால் கோயிலைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி வந்த ரிஷி சுனக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தன்னை ஒரு பெருமைமிக்க இந்து என்று குறிப்பிட்டார். அப்போதே அவர் டெல்லியில் ஒரு கோயிலுக்குச் செல்ல விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை அவர் கோயிலுக்குச் சென்றுள்ளார். அந்த ஜோடி சுமார் ஒரு மணி நேரம் கோயிலில் இருந்ததாக கூறப்படுகிறது.