திமுகவினரும் அமைச்சர்களும் பிரதமரை பார்த்து அச்சப்படுகிறார்கள்: அண்ணாமலை

சென்னையில் போராட்டம் நடத்திய என்னை கைது செய்யாததற்காக மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை “என் மண் என் மக்கள்” என்ற பெயரில் மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். முதல் கட்ட பயணம் முடிந்து தற்போது இரண்டாவது கட்டமாக நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அண்ணாமலையின் பாத யாத்திரை நேற்று மாலை திண்டுக்கல் மாவட்டம் பழநி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடைக்கானலில் நடைபயணத்தை தொடங்கினார். அப்போது அங்கு மக்கள் மத்தியில் பேசிய அண்ணாமலை கூறியதாவது:-

இந்தியா இன்றைக்கு பாதுகாப்பாக உள்ளது. காங்கிரஸ் ஆட்சி கால கட்டத்தில் எத்தனை குண்டு வெடிப்புகள், எத்தனை பயங்கரவாதிகள் நாட்டுக்குள் வந்தார்கள். ஆனால், பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால ஆட்சியில் இந்தியா பாதுகாப்பாக உள்ளது. தமிழ்நாட்டில் திமுகவினரும் அமைச்சர்களும் பிரதமரை பார்த்து அச்சப்படுகிறார்கள்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவி விலகக் கோரி நடத்திய முற்றுகை போராட்டத்தின் போது என்னை கைது செய்யாதற்காக மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார்கள். ஒரே குடும்பத்திற்காக முதல்வர் மு.க ஸ்டாலின் உழைத்து வருகிறார். மகனும் மருமகனும் சம்பாதிப்பதற்காக ஆட்சி நடைபெற்று வருகிறது. சிலருக்கு சனாதன தர்மம் என்றால் என்ன என்ற குழப்பம் இருக்கிறது. சனாதானம் என்பது மக்கள் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்லிக் கொடுக்கும் ஒரு தர்மம் ஆகும். எல்லா மக்களையும் சனாதனம் அரவணைத்து சென்றது. அரவணைக்க கூடியது இந்துத்துவம். டெங்கு, மலேரியா, கொசு எப்படி தமிழ்நாட்டில் இருக்கக் கூடாதோ அதுபோல திமுகவும் இருக்கக் கூடாது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

இந்நிலையில் அண்ணாமலையின் யாத்திரை கொடைக்கானல் நகர சாலைகளில் சென்ற போது திடீரென காட்டெருமை உள்ளே நுழைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜகவினர் அப்பகுதியில் இருந்து தலை தெறிக்க சிதறி அடித்து ஓடினர். இதனால் அந்த இடமே பெரும் பரபரப்பாக காட்சி அளித்தது.

கொடைக்கானல் யாத்திரையை நிறைவு செய்த பின்னர் நிலக்கோட்டை, ஆத்தூர் தொகுதிகளில் அண்ணாமலை பயணிக்கிறார். அதன் பின்னர் நத்தம், திண்டுக்கல் தொகுதிகளில் அண்ணாமலை பாதயாத்திரை செல்கிறது. செப்டம்பர் 15-ந் தேதி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டசபை தொகுதியில் நுழைகிறார் அண்ணாமலை. அங்கு வேடசந்தூர் பொதுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார். பின்னர் பழனிக்கு செல்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தின் 7 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 5 நாட்கள் அண்ணாமலையின் பாதயாத்திரை நடைபெறுகிறது.