தமிழ்நாட்டில் மத அடிப்படையிலான மோதலை ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் உருவாக்க பாஜக திட்டமிட்டு செயல்படுகிறது என முன்னாள் காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் காட்டமாக கூறியுள்ளார்.
சனாதன ஒழிப்பு என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முழக்கமிட்டதை முன்வைத்து “இந்தியா” கூட்டணிக்குள் குழப்பத்தை உருவாக்க பாஜக முயற்சித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியிலும் இருவிதமான கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவரும் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தெரியுமா? அமைதிப் பூங்காவாக திகழும் தமிழ்நாட்டில் மத மோதலை உருவாக்குவதுதான் பாஜகவின் திட்டம். இதற்காகத்தான் ஆளுநர் ரவி தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பாஜகவின் அரசியல் திட்டத்தை ஆளுநர் ரவி செயல்படுத்துகிறார். ஒரு ஆளுநர் எப்படி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்?
தமிழ்நாட்டில் பிற்படுத்த மக்கள் ஆட்சியில் உள்ளனர்; அரசாங்கத்தை நடத்துகின்றனர். அங்கே மத அடிப்படையில் குழப்பத்தை உருவாக்கத்தானே ஆளுநர் ரவியை அனுப்பி வைத்தீர்கள். நீங்கள்தான் குற்றவாளிகள். தமிழ்நாட்டில் இருப்பவர்களை உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு அழைத்துச் சென்று விஷ வித்துகளை விதைத்துள்ளது பாஜக. தமிழ்நாட்டில் மதவாத அரசியல், மதமோத அரசியல் இருந்தது இல்லை. தமிழ்நாட்டில் அமைதியை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. இதற்காக தமிழ்நாட்டு மக்களிடம் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு கபில் சிபல் கூறினார்.