இலங்கை அதிபர் ரணிலை மாநாட்டுக்கு அழைத்த மமதா பானர்ஜி!

வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி துபாய் விமான நிலையத்தில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது மேற்கு வங்க மாநில அரசு நடத்தும் சர்வதேச தொழில் முதலீட்டு மாநாட்டில் இலங்கை ஜனாதிபதி ரணில் பங்கேற்க வேண்டும் என மமதா பானர்ஜி அழைப்பு விடுத்திருக்கிறார்.

ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பெருமளவு நிதி உதவியை மத்திய அரசு வழங்கியது. தமிழ்நாடு அரசும் இலங்கை மக்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தது. ஆனாலும் சிங்கள தலைவர்கள், தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்த்து வருகின்றனர். தமிழ்நாட்டில் சிங்கள தலைவர்கள் நுழைவதற்கு கடும் எதிர்ப்பு நீடிப்பதால் அவர்கள் தவிர்த்து வருகின்றனர்.
அண்மையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வருகை தந்திருந்தார். பிரதமர் மோடி உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தையும் நடத்தினார். அப்போது தொழிலதிபர் அதானியும் ரணில் விக்கிரமசிங்கேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்நிலையில் துபாய், ஸ்பெயின் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பயணம் மேற்கொண்டுள்ளார். மமதா பானர்ஜி மொத்தம் 12 நாட்கள் இந்த வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போதுதான் துபாய் விமான நிலையத்தில் திடீர்னெ ரணில் விக்கிரமசிங்கேவை மமதா பானர்ஜி சந்தித்து பேசினார். இது தொடர்பாக மமதா பானர்ஜி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவில், துபாய் சர்வதேச விமான நிலைய காத்திருப்பு பகுதியில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே என்னை பார்த்தார். தம்முடன் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பும் விடுத்தார். அப்போது வரும் நவம்பர் மாதம் கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச தொழில் முதலீட்டு மாநாட்டில் பங்கேற்க ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அழைப்பு விடுத்தேன் என கூறியுள்ளார் மமதா பானர்ஜி. மேலும் தம்மை இலங்கைக்கு வருகை தர வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கே அழைப்பு விடுத்ததாகவும் மமதா பானர்ஜி பதிவிட்டுள்ளார்.