கேரளாவில் நிபா வைரசுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் நோய் தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த 2018-ம் ஆண்டு உயிர்க்கொல்லி நோயான நிபா வைரஸ் பாதித்து 17 பேர் வரை உயிரிழந்தனர். அப்போது இது பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒருவர், 2 பேர் என பாதித்து சிகிச்சை பெற்றனர். இந்தநிலையில் கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் காய்ச்சலால் பாதித்து சிகிச்சை பெற்று வந்த 49 வயது மதிக்கத்தக்க ஒருவர் கடந்த ஆகஸ்டு மாதம் 30-ந்தேதி உயிரிழந்தார். இதேபோல கடந்த 10-ந்தேதி அதே ஆஸ்பத்திரியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரும் உயிரிழந்தார். மேலும் இரண்டாவதாக இறந்த நபரின் மனைவி, 9 வயது, 4 வயது முறையேயான 2 மகன்கள் மற்றும் 10 மாத குழந்தை என 4 பேரும் காய்ச்சலால் ஆஸ்பத்திரியில் அனுதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில் 2 சிறுவர்களுக்கு தனிவார்டில் ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம், மாநில சுகாதாரத்துறைக்கு தகவல் அளித்தது.
இதற்கிடையே காய்ச்சலுக்கு இறந்த 2 பேர் மற்றும் சிகிச்சை பெற்று வரும் குழந்தை உள்பட 4 பேருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. இதனால் இறந்த நபர்களின் உடற்கூறுகள், சிகிச்சை பெற்று வரும் 4 பேரின் ரத்தம், உமிழ்நீர் திரவம் மாதிரிகள் எடுத்து பரிசோதனைக்காக புனேவில் உள்ள வைரஸ் நோய் தொற்றுகளை கண்டறியும் வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் காய்ச்சலுக்கு இறந்த 2 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது. அதில் 2 பேரும் நிபா வைரஸ் பாதித்து இறந்தது உறுதியானது. இதனை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மான்சுக் மாண்டவியாவும் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உறுதிபடுத்தியுள்ளார். இதைத்தொடர்ந்து 2-வதாக இறந்த நபருடன் தொடர்பில் இருந்த அவரது குடும்பத்தினர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்கள் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தனிவார்ட்டில் சிகிச்சை அமைக்கப்பட்டு வருகிறது. இவர்களின் மருத்துவ பரிசோதனை அறிக்கை விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் பாதித்து இறந்த 2 நபர்களும் கோழிக்கோடு மாவட்டம் மருதங்கரா, திருவள்ளூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களுடன் நேரடி தொடர்பு கொண்ட 75 நபர்களின் பட்டியல் சுகாதாரத்துறையினரால் தயாரிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு் சுகாதாரத்துறையினரின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இந்த 75 பேரில், இறந்தவர்களுடன் சம்பந்தப்பட்ட தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்களும் அடங்குவர்.
இதற்கிடையே நேற்று மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ், கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து மருத்துவ, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர், அதிகாரிகளிடம் நிபா வைரஸ் தொற்றை எதிர்கொள்ள முன்எச்சரிக்கையாக போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதையடுத்து சுகாதாரத்துறையினர் தீவிர நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 2 பேர் நிபா வைரஸ் பாதித்து இறந்த சம்பவம் கேரளாவில் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், தற்போது கேரளாவுக்குள் மீண்டும் நிபா வைரஸ் பரவுவது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அம்மாநில சுகாதாரத்துறை உடனடியாக களத்தில் இறங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் காய்ச்சல் முகாம்களை ஏற்படுத்துவது; காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிபா பரிசோதனை செய்வது; நிபா உறுதி செய்யப்பட்டால் உடனடியாக அவர்களை அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கேரளாவில் நிபா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதால் அண்டை மாநிலமான தமிழகத்திலும் தற்போது பீதி ஏற்பட்டுள்ளது. கேரளாவை ஒட்டிய தமிழக எல்லைகளான கன்னியாகுமரி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் விரைவில் ஈடுபடவுள்ளதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.