தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் 24 மணிநேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முயன்றதால் மத்திய அமைச்சரும் தெலுங்கானா மாநில பாஜக தலைவருமான கிஷன் ரெட்டியை அம்மாநில போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனால் ஹைதராபாத்தில் பதற்றம் நிலவுகிறது.
தெலுங்கானா சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஆளும் பிஆர்எஸ் கட்சி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தெலுங்கானா சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் ஆளும் பிஆர்எஸ் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்கிற முடிவுகளே அதிகம். தெலுங்கானாவைப் பொறுத்தவரையில் முதல்வர் கேசிஆருக்கு எதிரான பெரிய அலை வீசி அந்த அலையும் பாஜகவுக்கு சாதகம் என்றால்தான் ஆட்சி கனவு நிறைவேறும். அப்படியான எந்த ஒரு நிலைமையும் தற்போது இல்லை. ஆகையால் காங்கிரஸ், பாஜக இரண்டுமே இம்மாநிலத்தில் கடும் போராட்டத்தையே சந்திக்க வேண்டியிருக்கிறது.
இந்நிலையில்தான் தெலுங்கானா மாநில பாஜக தலைவராக திடீரென மத்திய அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டியை பாஜக மேலிடம் நியமித்தது. இதன் மூலம் பாஜகவை வலிமைப்படுத்த முடியும் என்பது அக்கட்சியின் கணக்கு. மேலும் தெலுங்கானா பாஜக வேட்பாளர்களை தேர்வு செய்ய பிற மாநில எம்.எல்.ஏக்களையும் அழைத்து வந்து தொகுதிகளில் ஆய்வு நடத்தியது பாஜக. இதனிடையே தெலுங்கானாவில் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் அரசின் மக்கள் விரோதப் போக்குகளைக் கண்டித்து 24 மணிநேர தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக கிஷன் ரெட்டி அறிவித்திருந்தார். ஹைதராபாத் இந்திரா பார்க்கில் இன்று இரவும் கிஷன் ரெட்டியின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தது. ஆனால் போலீசார் இதற்கு அனுமதி தரவில்லை.
இதனையடுத்து கிஷன் ரெட்டி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற இடத்தில் பெருமளவு போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கு எதிராக பாஜக தொண்டர்களும் திரண்டனர். இதனால் ஹைதராபாத் இந்திரா பார்க் பகுதியே போர்க்களமாக காட்சி தந்தது. ஒரு கட்டத்தில் பாஜக தொண்டர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை ஒருவழியாக தெலுங்கானா போலீசார் கைது செய்தனர். இதற்கு எதிராக தெலுங்கானா பாஜகவினர் போராட்டங்களை நடத்தினர். இதனால் ஹைதராபாத்தில் பதற்றம் நிலவுகிறது.