இந்தி விவகாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு உதயநிதி எதிர்ப்பு!

இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

இந்தி திவாஸ் தினத்தை முன்னிட்டு உள் துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட வாழ்த்து செய்தியில், இந்தியா பல்வேறு மொழிகளின் நாடாக உள்ளது. இந்தி எந்த இந்திய மொழியுடனும் போட்டியிட்டதில்லை, போட்டியிடவும் செய்யாது. இந்தி இந்தியாவில் உள்ள மொழிகளின் பன்முகத்தன்மையை ஒருங்கிணைக்கிறது. அனைத்து உள்ளூர் மொழிகளுக்கும் அதிகாரம் அளிக்கும் ஊடகமாக இந்தி மாறும் என்று குறிப்பிட்டார்.

மேலும், இந்தி ஒரு ஜனநாயக மொழியாக இருந்து வருவதாகவும் கூறிய அவர், சுதந்திர போராட்டம் நடந்த கடினமான நாட்களில் நாட்டை ஒருங்கிணைப்பதில் இந்தி முன்னோடியாக இருந்தது. இந்தி தகவல் தொடர்பு மொழியாக சுதந்திர போராட்டத்தை கிழக்கில் இருந்து மேற்காகவும் வடக்கில் இருந்து தெற்காகவும் முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்காற்றியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அமித்ஷா மாநில மொழிகளை, உள்ளூர் மொழிகள் என சுருக்கி பேசியதாக விமர்சனம் எழுந்த நிலையில், தற்போது இந்தி நாட்டை ஒருங்கிணைக்கிறது என்று அமித்ஷா கூறியதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில், “இந்தி தான் நாட்டு மக்களை ஒன்றிணைக்கிறது – பிராந்திய மொழிகளுக்கு அதிகாரமளிக்கிறது” என்று வழக்கம் போல தனது இந்தி மொழிப் பாசத்தை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பொழிந்துள்ளார். இந்தி படித்தால் முன்னேறலாம் என்ற கூச்சலின் மாற்று வடிவம் தான் இந்தக் கருத்து என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தமிழ் – கேரளாவில் மலையாளம். இவ்விரு மாநிலங்களையும் இந்தி எங்கே ஒன்றிணைக்கிறது? எங்கே வந்து அதிகாரமளிக்கிறது என்று கேள்வி எழுப்பிய அவர், “நான்கைந்து மாநிலங்களில் பேசப்படும் இந்தியை, ஒட்டு மொத்த இந்திய ஒன்றியத்தையும் ஒன்றிணைப்பதாக கூறுவது அபத்தமானது. இந்தியைத் தவிர பிற மொழிகளை பிராந்திய மொழிகள் என்று சுருக்கி இழிவுபடுத்துவதை அமித்ஷா நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.