தமிழக மக்களுக்குஒத்தையாக கொடுத்து கத்தையாக எடுப்பதே தி.மு.க.வின் திட்டம் ஆகும் என்று பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார்.
தமிழகம் முழுவதும் ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல், சின்னாளப்பட்டி, நிலக்கோட்டையில் நடைபயணத்தை முடித்த அவர் 3-வது நாளாக நேற்று மாலை நத்தத்தில் நடைபயணத்தை தொடங்கினார். நத்தம் அருகே உள்ள பள்ளப்பட்டி விலக்கு பகுதியில் இருந்து நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை புளிக்கடை பஸ்நிறுத்தம், கோவில்பட்டி வழியாக நத்தம் பஸ்நிலைய ரவுண்டானா பகுதிக்கு வந்தார். அங்கு திரண்டிருந்த பா.ஜ.க. தொண்டர்கள், பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் கைக்குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். இதனைக்கண்ட அவர், கைக்குழந்தையை அண்ணாமலை வாங்கி சிறிது தூரம் நடந்தார். பின்பு அந்த பெண்ணிடமே குழந்தையை கொடுத்தார். இதைத்தொடர்ந்து நத்தம் பஸ்நிலையம் அருகே ரவுண்டானா பகுதியில் வேனில் நின்றபடி அண்ணாமலை பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தமிழக மக்களிடம் ஒத்தையாக கொடுத்து, கத்தையாக எடுப்பதே தி.மு.க.வின் திட்டம். தமிழகத்தில் டாஸ்மாக் கடை தேவை இல்லை என்று என்னிடம் 30 சதவீத பெண்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். பொய்யை மட்டும் சொல்லி ஆட்சி நடத்துவதே தி.மு.க.வின் வேலை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களையும், தமிழகத்தில் 39, புதுச்சேரியில் 1 இடத்தையும் கைப்பற்றி 3-வது முறையாக பிரதமராக மோடி பதவி ஏற்பார். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-
இன்றைய மாலை பயணம், முன்னொரு காலத்தில் திண்டீஸ்வரம் என்றழைக்கப்பட்ட, சேர, சோழ, பாண்டியர்களின் எல்லையாக விளங்கிய திண்டுக்கல் மாநகரில் மாண்புமிகு பாரதப் பிரதமரின் நல்லாட்சிக்குச் சாட்சியாகப், பெருந்திரளெனக் கூடியிருந்த மக்கள் மத்தியில் வெகு சிறப்பாக நடந்தேறியது. மாங்காய் பூட்டு, மணி பூட்டு, தொட்டி பூட்டு உள்ளிட்ட பல்வேறு வகையாகத் தயாரிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வரும் திண்டுக்கல் பூட்டுக்கு 2019ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கியது நமது மத்திய அரசு. திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள ஆள் உயரம் கொண்ட பூட்டு திண்டுக்கல் பூட்டு என்பது நமக்கெல்லாம் பெருமை. கடவுளுக்கே பூட்டு போட்டு பாதுகாப்பு தேவையா என்று திமுககாரர்கள் கேட்பார்கள். பாவம் செய்த திமுகவினரும் பரிகாரம் தேட கோவிலுக்கு வருவதால் தான் பூட்டு போட்டுப் பாதுகாக்க வேண்டியுள்ளது.
நிலவில் கால் பதித்துள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் ஆர்பிட்டர், லேண்டர், ரோவர் மூன்றும் பெங்களூர் இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு மையத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இவற்றுக்கான கட்டளைகளை பிறப்பிக்கக் கூடிய டெலிகமாண்ட் சாப்ட்வேட் (Telecommand Software) வடிவமைப்பாளர் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்த்த விஞ்ஞானி கௌரிமணி ராமராஜ். நேற்று வெளியான நமது நாட்டில் தயாராகும் iPhone 15 launch iPhone 15ல் இஸ்ரோ கண்டுபிடித்த NAVIC சிஸ்டம் பொறுத்தப்பட்டுள்ளது. வீரமங்கை வேலுநாச்சியாருக்கு அடைக்களம் கொடுத்தவர் சுதந்திர போராட்ட வீரரான விருப்பாச்சி கோபால் நாயக்கர் அவர்கள். திண்டுக்கல் விருப்பாச்சி பாளையத்தை ஆண்ட கோபால் நாயக்கரின் நினைவாக கோபால சமுத்திரக்கரையில் முழு உருவச் சிலை வேண்டும் என்ற திண்டுக்கல் மக்களின் கோரிக்கையை நமது ஆட்சியில் நிறைவேற்றுவோம். திப்புசுல்தான் காலத்தில் அழிக்கப்பட்ட திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்த மலைக்கோட்டையில் உள்ள கோவிலை புனரமைத்து மீண்டும் மக்கள் வழிபாட்டுக்கு கொண்டு வர முயற்சிகள் எடுப்போம். திப்பு சுல்தான் போன்றவர்களின் படையெடுப்பில் அழிக்கமுடியாத சனாதன தர்மத்தை திமுக அழித்துவிடுமா?
தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று திண்டுக்கல்லுக்கு வழங்கப்பட்டது. மதுரை மற்றும் நத்தம் இடையே போக்குவரத்துக்கு நெரிசலை குறைக்க 7.3 Km, தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலத்தை 613 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இதை நமது பாரத பிரதமர் இந்த வருடம் ஏப்ரல் மாதம் துவக்கி வைத்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை மேம்படுத்த 1159 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது நமது மத்திய அரசு. 242 கோடி ரூபாய் செலவில் திண்டுக்கல் பழனி பாலக்காடு ரயில் மின்சாரமயமாக்குதல் பணிகள் நிறைவுபெற்று மக்கள் பயன்பாட்டிற்கு இந்த வருடம் ஏப்ரல் மாதம் நமது பாரத பிரதமர் மோடி துவக்கி வைத்தார். நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் 2050ஆம் ஆண்டுக்குள் ரயில்தடம் மின்சார மயமாக்குவோம் என்று சொல்கிறார்கள். இந்தியாவில் கடந்த 9 ஆண்டுகளில் 37,011 ரயில் கிலோமீட்டர் மின்சாரமயமாக்கி சாதனை படைத்துள்ளார் நமது பாரத பிரதமர். ஒட்டுமொத்த ரயில் தடங்களில் 90 சதவீதம் இன்று மின்சார மயமாக்கப்பட்டுள்ளது.
திமுக என்பது குறுநில மன்னர்களுக்கான குடும்ப ஆட்சி. ஊருக்கு ஊர் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் பதவிக்கு வரவேண்டும் மற்றவர்கள் போஸ்டர் ஒட்டவேண்டும். திமுகவுக்கு தெரிந்தது, சாராயம் விற்போம், சனாதனத்தை ஒழிப்போம், தேர்தலுக்கு முன்பு பல்டி அடிப்போம். வரும் பாராளுமன்றத் தேர்தலில், மக்கள் விரோத ஊழல் திமுக கூட்டணியை விரட்டியடிப்போம். மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியைத் தொடரச் செய்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.