நிபா வைரஸ்: புதுச்சேரியின் மஹேயில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முதல் விடுமுறை!

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு தீவிர அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், கேரளாவுக்கு அருகே உள்ள புதுச்சேரி பிராந்தியமான மஹேயில் இன்று முதல் வரும் 17ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு கடந்த 2018ம் ஆண்டு முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பால் அப்போது சுமார் 17 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து வைரஸை கட்டுப்படுத்த கேரள அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு குறித்த அச்சம் மேலெழுந்திருக்கிறது. கேரளாவை சேர்ந்த இருவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி உயிரிழந்தனர். இவர்கள் மர்ம காய்ச்சலுக்கா சிகிச்சை பெற்று வந்தனர். அதேபோல இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உட்பட சிலரும் காய்ச்சலுக்காக சிகிச்சை எடுத்து வந்தனர். இவர்கள் அனைவருக்கும் நிபா வைரஸ் பாதிப்பு குறித்த அறிகுறிகள் இருந்துள்ளன. இதனையடுத்து உயிரிழந்தவர்களின் மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி உயிரிழந்தவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை கடந்த 12ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி செய்தார்.

கேரளாவில் கோழிக்கோடு, மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மர்ம காய்ச்சல் தீவி்ரமாக பரவி வரும் நிலையில் நிபா வைரஸ் குறித்த இந்த அறிவிப்பு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மர்ம காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 5 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல இவர்களுடன் தொடர்பில் இருந்த 789 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்று மேலும் பரவாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதேபோல மத்திய அரசின் சார்பில் வைரஸ் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கை தொடர்பாக முடிவு செய்யும் குழு ஒன்று கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நுண்ணுயிரியலாளர் மால சாப்ரா, தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய துணை இயக்குநர் ஹிமான்ஷூ சௌஹான் என பல்துறை வல்லுநர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கேரளாவுக்கு அருகே உள்ள புதுச்சேரி பிராந்தியமான மஹேயில் இன்று முதல் வரும் 17ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாஹே நிர்வாக அலுவலர் சிவராஜ் மீனா பிறப்பித்துள்ள உத்தரவில், “மாஹே அருகேயுள்ள கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவலால் பல பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகள் மாஹேக்கு அருகேயுள்ளது. அங்கிருந்து பலரும் புதுச்சேரி பிராந்தியமான மாஹேக்கு கல்விக்கற்க வருகின்றனர். புதுச்சேரி பிராந்தியமான மாஹேயில் நிபா வைரஸ் பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதன்படி புதுச்சேரி பிராந்தியமான மாஹேயில் நாளை (இன்று) முதல் வரும் 17ம் தேதி வரை அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றுக்கு விடுமுறை விடப்படுகிறது. தேர்வுகள் ஒத்திவைக்கப்படும். மாற்று தேதி அறிவிக்கப்படும். அதேபோல் அனைத்து அங்கன்வாடிகளும், மதராஸாக்களும் இந்நாட்களில் விடுமுறை விடப்படும். அதேபோல் அனைத்து டியூசன் சென்டர்கள், பயிற்சி வகுப்புகள் இக்காலத்தில் நடத்தக்கூடாது. பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும்.

கைகளை சுத்தம் செய்த கிருமிநாசினி வைத்திருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதை கண்காணிக்க வேண்டும். மருத்துவமனை, மார்க்கெட் சென்று வந்தாலும் சாப்பிடும் முன்பு, கழிவறையை பயன்படுத்திய பின்னர் கண்டிப்பாக கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.