அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்த வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்!

கனிமவளத் துறை முறைகேடுகள் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வீட்டி அமலாக்கத்துறை சோதனை நடத்த வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதனைத் தொடர்ந்து மணல் குவாரி முறைகேடுகள் தொடர்பாக தற்போது சோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க இன்னமும் நேரம் இருக்கிறது. நாங்களும் பூத் கமிட்டி வைத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் அங்கீகரிக்கப்பட்ட 3-வது பெரிய கட்சி தேமுதிக. தேர்தல் நெருங்கும் போது யாருடன் கூட்டணி, எத்தனை சீட், எந்த தொகுதிகள் என்பதை விஜயகாந்த் அறிவிப்பார். தேமுதிகவில் யாருக்கு என்ன பதவி என்பதை விஜயகாந்த் மட்டுமே முடிவெடுப்பார். எனக்கே 15 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் கட்சிப் பதவி கொடுத்தார். எங்கள் மகன் விஜய பிரபாகரனுக்கு என்ன பதவி, அவர் லோக்சபா தேர்தலில் போட்டியிடுவாரா? இல்லையா? என்பதை விஜயகாந்த் முடிவெடுத்து நேரம் வரும் போது அறிவிப்பார்.

தமிழ்நாட்டில் கனிமவள கொள்ளையை நினைத்தாலே அவ்வளவு அதிர்ச்சியாக இருக்கிறது. ஆலங்குளத்தில் தேமுதிக போராட்டமும் நடத்தினோம். தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மணலும் கனிமவளங்களும் கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மழை பொழிவே பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகனிடம் கேள்வி கேட்டால் தமக்கு எதுவும் தெரியாது என பச்சை புள்ளை போல நடிக்கிறார். அமலாக்கத்துறை அதிகாரிகள் முதலில் அமைச்சர் துரைமுருகன் வீட்டுக்கு ரெய்டு போக வேண்டும். அவரிடம்தான் விசாரணை நடத்த வேண்டும். அவர் எதுவும் தெரியாது என ஏமாற்றுகிறார். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்குள் ஒரே ஒரு லாரி மணலை கொண்டு வந்துவிட முடியுமா? வரவாய்ப்பே இல்லை. அவர்கள் இயற்கை வளத்தைப் பாதுகாக்கின்றனர். தமிழ்நாடு மட்டும்தான் லஞ்சம், ஊழல், கொள்ளை என கெட்டு குட்டிச்சுவராகி கிடக்கிறது. இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.