சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பங்கேற்றவர்களுக்கு எதிராகவும், சிபிஐ விசாரணை கோரியும் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் சமீபத்தில் தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடந்தது. இதில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இதில் உதயநிதி ஸ்டாலின் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின், ‛‛ சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்காகு வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம்” என்றார்.
உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா முதல் பாஜக முதல்வர்கள் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போலீஸ் நிலையங்களிலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதோடு உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க அவருக்கு மிரட்டல் விடுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. மேலும் உதயநிதி ஸ்டாலின் மீது அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட்டுக்கு உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் உள்பட 262 பேர் கையெழுத்திட்டு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் தான் சனாதான ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபுவுக்கு எதிராகவும், சிபிஐ விசாரணை கோரியும் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜெகன்நாத் என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னையில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு பங்கேற்றது அரசிலமைப்பு சாசனத்திற்கு முரணானது. இதனால் அவர்கள் பங்கேற்றதை அரசிலமைப்பு சாசனத்துக்கு முரணானது என அறிவிக்க வேண்டும். அதோடு சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி உச்சநீதிமன்றத்தில் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.