திமுகவை இண்டியா கூட்டணி கட்சிகள் கண்டிக்காதது ஏன்?: நிர்மலா சீதராமன்!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய திமுகவை, இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகள் ஏன் கண்டிக்கவில்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:-

சனாதன தர்மத்தை எதிர்க்கக் கூடாது; ஒழிக்க வேண்டும் என்று திமுகவைச் சேர்ந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசி இருக்கிறார். ஆனால், இண்டியா கூட்டணியில் உள்ள எந்த ஒரு கட்சியும் இதனை கண்டிக்கவில்லை. இண்டியா கூட்டணி இந்துக்களுக்கு எதிராக உள்ளது. அதோடு, இந்தியாவை பிளக்க வேண்டும் எனும் குழுக்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவாக இருக்கிறது.

சனாதனத்துக்கு எதிராக திமுக பேசுவது புதிதல்ல. அக்கட்சியின் பிரதான கொள்கை அது. திமுகவின் இதுபோன்ற கருத்துக்களால் தமிழக மக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால், மொழி தடை காரணமாக நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இது குறித்த சரியான புரிதல் இதுவரை ஏற்படாமல் இருந்தது. தற்போது சமூக ஊடகங்கள் வந்துவிட்டதால், அமைச்சர் என்ன பேசினார் என்பதை அறிந்து கொள்ள மொழிபெயர்ப்பாளர் என யாரும் தேவைப்படுவதில்லை. கடந்த 70 ஆண்டுகளாக திமுக இப்படித்தான் பேசி வருகிறது. உதயநிதியின் பேச்சு சட்டவிரோதமானது. அமைச்சராக பதவி ஏற்கும்போது அவர் எடுத்துக்கொண்ட பிரமாணத்துக்கு எதிரானது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.