நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை அருகே தாம்பரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
இந்த ஆட்சியில் பெயர் வைப்பதுதான் சாதனை; எந்த கட்டிடத்தை திறந்தாலும் தந்தை கருணாநிதி பெயர் வைத்துவிடுவார் முதல்வர் ஸ்டாலின். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அதிமுக ஆட்சியில்தான் பல கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டன. சேலத்தில் அதிமுக கட்டிய பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயர் வைத்துள்ளனர். அதிமுக பெற்ற பிள்ளைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் வைத்து கொண்டிருக்கிறார். இன்னும் கொஞ்ச நாள் போனால் தமிழ்நாட்டின் பெயரை மாற்றிவிடுவார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டுக்கு தந்தை கருணாநிதி பெயரை வைத்து ‘கருணாநிதி நாடு’ன்னு பெயர் சூட்டி விடுவார் முதல்வர் ஸ்டாலின். இதுதான் இந்த ஆட்சியின் சாதனை.
விரைவிலே நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் அண்ணா திமுக வேட்பாளரை நீங்கல் ஆதரிக்க வேண்டும். அத்துடன் ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும்.. எதிர்பார்க்கின்றோம்.. தமிழ்நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று சொன்னால், ஊழல் ஆட்சியான திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்ற குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் குரலை நிறைவேற்ற வேண்டும் எனில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அவசியம். அதற்காக நாம் பாடுபட வேண்டும். தேர்தல் நெருங்கிவிட்டது.. போர் என்ற யுத்தம் தொடங்கிவிட்டது.. யுத்தத்திலே நாம் சந்திக்க வேண்டும். எதிரிகளை புறமுதுகு காட்டி ஓட ஓட விரட்ட வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல்.. நாடாளுமன்றத்துக்கும் சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும் என நம்புகிறோம். அப்படி வந்தால்தான் தமிழ்நாட்டைக் காப்பாற்ற முடியும். இல்லாவிட்டால் ஆண்டவனால் கூட தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாது. இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.