சனாதன தர்மம் குறித்த எந்த சர்ச்சையிலும் சிக்குவதற்குக் காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை: ப.சிதம்பரம்

தெலுங்கானாவில் நடந்த காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ப. சிதம்பரம், சனாதன தர்மம் குறித்த எந்த சர்ச்சையிலும் சிக்குவதற்குக் காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்ட பிறகு, அக்கட்சியில் புதிய செயற்குழு அமைக்கப்பட்டது. இந்த புதிய காரிய கமிட்டி உறுப்பினர்களின் முதல் கூட்டம் இன்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. விரைவில் தெலுங்கானா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அது குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், இதில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ 2 யாத்திரை வேண்டும் எனச் சிலர் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிகிறது.

இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்திற்குப் பிறகு முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடிக்கு உலக நாடுகளுக்கு எல்லாம் செல்ல நேரம் இருக்கிறது. ஆனால், இனக் கலவரம் நடக்கும் மணிப்பூருக்குச் செல்ல பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு மணி நேரம் கூட கிடைக்கவில்லை. இது ஏமாற்றத்தை அளிக்கிறது. கடந்த மே 5ஆம் தேதி முதல் மணிப்பூர் பற்றி எரிகிறது. நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்பு மணிப்பூரைப் பற்றி இரண்டு நிமிடம் பேசினார். அதன் பிறகு மணிப்பூரைப் பற்றி அவர் எதுவும் பேசவில்லை.

இப்போது இருக்கும் அரசியல் சூழலை வைத்துப் பார்க்கும் போது, நாட்டின் அரசியலமைப்பு மற்றும் கூட்டாட்சி கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம்.. கூட்டாட்சி முறையைத் திட்டமிட்டு வலுவிழக்கச் செய்கிறார்கள்.. மாநில அரசுகள் உரிமைகள் பறிக்கப்படுகிறது. மாநில அரசுகளுக்கான வருவாய் மறுக்கப்படுகிறது அல்லது குறைக்கப்படுகிறது. மாநில அரசுகள் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் தடைகளை ஏற்படுத்துகிறார்கள்.. இது குறித்து நான் இரண்டு உதாரணங்களை மட்டும் சொல்ல விரும்புகிறேன்.. முதலில் கர்நாடகாவின் அரிசி விவகாரம்.. கர்நாடக அரசு தனது திட்டத்திற்காக அரசியைக் கேட்டனர். இதற்கான நிதியைத் தர ஒப்புக் கொண்டாலும் கூட மத்திய அரசின் அறிவுறுத்தலால் இந்திய உணவு கழகம் அரிசியைக் கொடுக்க மறுத்துவிட்டது. ஒரே நாடு ஒரே இதற்கு முன் நாட்டில் இப்படி நடந்ததே இல்லை. அதேபோல இமாச்சலப் பிரதேசத்திற்கு பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படவில்லை.. குழந்தைக்குக் கூட இந்த இரண்டிற்கும் காரணம் தெரியும்.. ஏனென்றால் பாஜக இந்த இரு மாநிலங்களிலும் தோல்வி அடைந்திருந்தது. இவை அரசியல் ரீதியான பிரச்சினை.. அதேபோல நமது நாடு பொருளாதார ரீதியிலும் மிகப் பெரிய பிரச்சினையை எதிர்கொண்டு இருக்கிறது. இவை குறித்து நாங்கள் இன்று விவாதித்தோம்” என்றார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த அவர், “நாங்கள் இதை முற்றிலுமாக நிராகரிக்கிறோம்.. இது கூட்டாட்சியின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறோம்.. இதைச் செயல்படுத்தக் குறைந்தது ஐந்து அரசியலமைப்பு திருத்தங்கள் தேவைப்படும். இந்த அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களை நிறைவேற்ற பாஜகவில் போதியளவில் எம்பிக்கள் இல்லை. இது அவர்களுக்கும் நன்கு தெரியும். இருப்பினும், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மாயையை முன்வைத்து உண்மையான பிரச்சினைகளைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள்” என்றார்.

சனாதனம் குறித்து மிகப் பெரிய சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ப சிதம்பரம், “சனாதன தர்மம் குறித்து இன்று நடந்த கூட்டத்தில் எந்த விவாதமும் நடைபெறவில்லை. சனாதன தர்மம் குறித்த எந்த சர்ச்சையிலும் சிக்குவதற்குக் காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை.. எல்லா மதங்களும் சமமானவை என்பதை நம்புகிறோம். அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.. பல தலைமுறைகளாகக் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடாக இதுவே இருந்து வருகிறது” என்றார்.