‘இந்தியா’ கூட்டணியின் அக்.2 போபால் கூட்டம் திடீர் ரத்து!

“இந்தியா” கூட்டணியின் அக்டோபர் 2 போபால் பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ம.பி. முன்னாள் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல்நாத் அறிவித்துள்ளது அதில் இடம் பெற்றுள்ள கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“இந்தியா” கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னா, 2-வது கூட்டம் பெங்களூர், 3-வது கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுக்களும் ஒன்று கூடி ஆலோசனை நடத்தின. டெல்லியில் நடைபெற்ற “இந்தியா” கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு, வியூகம் வகுக்கும் குழு கூட்டத்தின் முடிவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அக்டோபர் 2-ந் தேதி பொதுக் கூட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. மத்திய பிரதேசத்தில் 2018-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. ஆனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை கவிழ்த்து பாஜக ஆட்சியைப் பிடித்தது. ம.பி. சட்டசபைக்கு நவம்பர் இறுதி அல்லது டிசம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது. ம.பி. சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக படுதோல்வி அடையும் என்பது பொதுவான கருத்து கணிப்புகள் முடிவு.

இந்நிலையில்தான் மத்திய பிரதேசம் போபாலில் அக்டோபர் 2-ந் தேதி “இந்தியா” கூட்டணியின் பொதுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்று செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத், அக்டோபர் 2-ந் தேதி பொதுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இருந்தபோதும் போபால் பொதுக் கூட்டம் ரத்து ஏன்? என்பதற்கான அதிகாரப்பூர்வ காரணங்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.