மணல் கடத்தவே நேரம் இல்லாத போது தடுப்பணை எப்படி கட்டுவார்கள்? என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார். நேற்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பொதுக் கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-
வேடசந்தூரில் கம்யூனிஸ்டுகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது திமுக எம்.எல்.ஏ. காந்திராஜன், வேலை இல்லாதவர்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்றார். கம்யூனிஸ்டுகள் எப்போதும் திமுகவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய மாட்டார்கள். பாஜகவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய பிறந்த ஒரு கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. மக்களுடைய பிரச்சனைகளுக்கு போராடுவதை மறந்த கம்யூனிஸ்டுகள் மக்களுக்காக போராட்டம் நடத்துகின்றனர். அதைக் கூட திமுக எம்.எல்.ஏ. காந்திராஜன் அவமானப்படுத்தி இருக்கிறார்.
தமிழ்நாடு அரசு சார்பில் வேடசந்துரில் முருங்கை இலை, முருங்கை காய் பதப்படுத்துகிற குடோன் கட்டிக் கொடுக்கப்பட்டது. அந்த குடோன் இன்று சட்டவிரோதமாக, தனியார் நூற்பாலை நூல்கள் பதுக்கி வைக்கும் இடமாக பயன்படுத்தி வருகிறது. அந்த குடோன் விவசாய பெருமக்களுக்கானது. அந்த குடோன் செயல்பட்டிருந்தால் குறைந்தது 100 பேருக்காவது வேலை கிடைத்திருக்கும். இதை எல்லாம் பார்க்காத வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ, ஒரு பெண் அழகாக இருக்கிறாரா? இல்லையா? என பார்ப்பதை முழு நேர வேலையாக வைத்துக் கொண்டிருக்கிறார்.
2021 சட்டசபை தேர்தலின் போது வேடசந்தூர் தொகுதி மக்களுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மாயனூர் கதவணையில் இருந்து வேடசந்தூருக்கு காவிரி நீர் கொண்டுவரப்படும் என்ற வாக்குறுதி 30 மாதங்களாகியும் நிறைவேற்றப்படவில்லை. கிராமங்களில் பால் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும் என்பதும் நிறைவேற்றப்படவில்லை. சிப்காட் தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்பதற்கு ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை. லட்சுமணம்பட்டியில் குடகனாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவோம் என்றார். ஆனால் மணல் கடத்தவே நேரம் இல்லாத போது தடுப்பணை எப்படி கட்டுவார்கள்? வேடசந்தூர் அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும் என்றார். அதற்கும் ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்கவில்லை. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.