தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வாங்க: சுப்பிரமணியன் சாமி!

அண்ணா பிறந்தநாளையொட்டி திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி சார்பில் சனாதன எதிர்ப்பு குறித்த கருத்துகளை பேசக்கூறி அறிக்கை வெளியான நிலையில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி கொந்தளித்துள்ளார்.

சென்னையில் சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ‛‛டெங்கு, மலேரியா, கொரேனா உள்ளிட்டவற்றை எதிர்க்க முடியாது. ஒழிக்கத்தான் வேண்டும். அதேபோல் தான் சனாதனமும்” என பேசினார். இவரது இந்த பேச்சு பெரும் விவாதத்தை எழுப்பியது. திமுக மற்றும் ‛இந்தியா’ கூட்டணி என்பது இந்து மதம், சனாதன தர்மத்துக்கு எதிரானது என பாஜகவினர் பேசி வருகின்றனர். அதோடு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, அவர் மீது போலீஸ் நிலையங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் திருவாரூர் மாவட்ட திமுக சார்பில் காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சனாதன எதிர்ப்பு கருத்தரங்கம் நடப்பதாகவும், திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்று சனாதன எதிர்ப்பு குறித்த கருத்துகளை பதிவு செய்யலாம் எனவும் அந்த கல்லூரியின் முதல்வர் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

இது சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் கடும் எதிர்ப்பு கிளப்பியது. கல்லூரி முதல்வர் பதவி விலக வேண்டும். சுற்றிக்கையை திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் போராட்டங்கள் நடத்தப்படும் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தனது சுற்றிக்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறியதோடு விருப்பம் இருந்தால் மாணவர்கள் அந்த கருத்தரங்கில் பேசலாம் என மற்றொரு சுற்றிக்கையை வெளியிட்டார். இதற்கும் எதிர்ப்பு கிளம்பியதால் வேறு வழியின்றி 2 சுற்றறிக்கையையும் திரும்ப பெற்றார்.

இந்நிலையில் தான் இந்த கல்லூரி சுற்றிக்கை குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், திருவாரூர் திருவிக அரசு கலைக்கல்லூரி முதல்வர் பெயரில் வெளியான அறிக்கையை பதிவிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‛‛சனாதன எதிர்ப்பு பற்றி தங்களின் ஆழ்ந்த கருத்துகளை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று மாலை 3 மணியளவில் காட்டூர், கலைஞர் கோட்டத்தில் பகிர்ந்து கொள்ள கேட்டு கொள்ளப்படுகிறார்கள்’ என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த சுற்றறிக்கை உண்மையாக இருந்தால் அதிர்ச்சியளிக்கிறது. மேலும் உடனடியாக ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும். மேலும் துணைவேந்தர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். ஒருவேளை இந்த சுற்றறிக்கை உண்மை இல்லை என்றால் இதை வெளியிட்டர்களை கண்டறிந்து கண்காணிக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.