தமிழ்நாட்டில் மட்டுமல்ல சாதிய தீண்டாமை எங்கு நடந்தாலும் தவறுதான் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய பேச்சு புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஆளுநர் ரவி அந்நிகழ்ச்சியில் பேசுகையில், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் அதிக ஜாதிய பாகுபாடுகள், வன்முறைகள் நடைபெறுகின்றன. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஜாதிய பாகுபாடு காட்டப்படுகிறது. மேலும் தலித்துகள் சமைத்த உணவை சாப்பிட மறுப்பது, குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது ஆகிய நிகழ்வுகளையும் ஆளுநர் ஆர்.என்.ரவி தமது பேச்சில் சுட்டிக்காட்டி இருந்தார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஆளுநர் ஆர்.என்.ரவி என்ன சொல்கிறாரோ அதனைத்தானே நாங்களும் சொல்கிறோம். அந்த ஜாதிய பாகுபாடு இருப்பதால்தானே சனாதனத்தை ஒழிப்போம் என்கிறோம். அதனால்தான் ஜாதிய ஒடுக்குமுறைகளை அழிப்போம் என்கிறோம். எங்களைப் பொறுத்தவரை பிறப்பால் அனைவரும் சமம் என்பதுதான் கொள்கை. ஜாதிய ஒடுக்குமுறைகள், கொடுமைகள் எங்கு நிகழ்ந்தாலும் அது தவறுதான். அத்தகைய ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம்.
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்த கருத்து அவர்கள் கட்சி சார்ந்தது. அதில் நான் தலையிட விரும்பவில்லை. அடுத்த 25 ஆண்டுகளுக்கான போக்குவரத்து திட்டத்தை உருவாக்கும் வகையில் பொதுமக்கள் தயக்கம் காட்டாது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில், அடுத்த 25 ஆண்டுகளில் போக்குவரத்து கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.