அண்ணாதுரை மாபெரும் தலைவர் என்பதை ஏற்றுக் கொள்கிறேன். திராவிட அரசியலில் குடும்பம் வரக்கூடாது என சொன்ன மாமனிதர் அவர். அவரை நான் மதிக்கிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
அண்ணாதுரை பற்றி அண்ணாமலை கூறிய கருத்து தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 1956-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற தமிழ் மாநாட்டின் போது கடவுளை கேலி செய்யும் வகையில் அண்ணா பேசியதாகவும், இதனால் கோபமடைந்த முத்துராமலிங்க தேவரிடம், அண்ணா மன்னிப்பு கேட்டுவிட்டு ஓடி வந்ததாகவும் அண்ணாமலை அண்மையில் கூறினார். அவரது இந்தக் கருத்துக்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக எதிர்வினை ஆற்றி வருகின்றனர்.
குறிப்பாக, செல்லூர் ராஜு பேசும் போது, “அண்ணாதுரையை பற்றி யார் பேசினாலும் அவனது நாக்கு துண்டாக்கப்படும்” என பகிரங்கமாக எச்சரித்தார். அதேபோல, சி.வி. சண்முகம் பேசுகையில், “அண்ணாமலை இத்துடன் அதிமுக தலைவர்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்” என மிரட்டும் தொனியில் பேசினார்.
இந்நிலையில், இதற்கு அண்ணாமலையும் அதே தொனியில் பதிலடி கொடுத்தார். “இது 10 வருஷமாக துப்பாக்கி பிடித்த கை. இந்த மிரட்டல் உருட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்” என அவர் கூறினார். இந்த சூழலில், அண்ணாதுரையை தான் ஏற்றுக்கொள்வதாக அண்ணாமலை தற்போது கூறியிருக்கிறார். அவர் பேசியதாவது:-
‘தி இந்து’ நாளிதழில் 1956-ம் ஆண்டு ஜூன் 1, ஜூன் 2, ஜூன் 3 ஆகிய தேதிகளில் பிரசுரமாகியுள்ள செய்திகளை பாருங்கள். நான் கூறிய விஷயத்தில் ஏதாவது சிறு தவறு இருந்தாலும் என்னை கேளுங்கள். ஒரு விஷயத்தை நான் சொல்கிறேன் என்றால் அது சரியாகதான் இருக்கும். பேரறிஞர் அண்ணா மாபெரும் தலைவர். நான் ஏற்றுக்கொள்கிறேன். எதில் அவர் மாபெரும் தலைவர்? திராவிட அரசியலில் குடும்பம் கூடாது என்று சொன்ன மாமனிதர் அவர். கஷ்டப்பட்டு வந்தவர். சுத்தமான அரசியலை கொடுக்க நினைத்தவர்.
அப்படிதான் நான் அண்ணாதுரையை பார்க்கிறேன்.
இன்னைக்கு அண்ணாதுரைக்கு சப்போர்ட் செய்து வருபவர்கள், அவர் கூறியபடி நடக்கிறார்களா? அண்ணாதுரைக்கு நான்கு வளர்ப்பு குழந்தைகள். நான்கு பேரையும் அரசியலுக்கு போகக்கூடாது என்று சொன்னவர் அண்ணா. டாக்டர் பரிமளம் அவரது முதல் வளர்ப்பு மகன். அரசாங்கத்தில் மருத்துவராக இருந்து 60 வயதில் ஓய்வுபெற்றவர். அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார்? தன்னுடைய வியாதியை சரிசெய்ய பணம் இல்லை என்பதால் கிணற்றில் குதித்து டாக்டர் பரிமளம் தற்கொலை செய்து கொண்டார்.
அண்ணாவை எங்கு ஏற்றுக்கொள்ள வேண்டுமோ அங்கு ஏற்றுக்கொள்வேன். மாபெரும் தலைவர். தமிழகத்துக்காக உழைத்தார். எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்பதை நமக்கு காண்பித்துக் கொடுத்தவர். ஆனால் அதற்காக அவரை கடவுளாக நான் பார்க்க மாட்டேன். கொள்கை ரீதியாக விமர்சனம் இருந்தால் அதை நிச்சயம் வைப்பேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.