ஐரோப்பிய நாடாளுமன்ற விவாதம் பற்றிய ஆ.ராசா பேச்சுக்கு பியூஷ் கோயல் எதிர்ப்பு!

இந்தியாவுக்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் கண்டனம் தெரிவித்ததாக ஆ.ராசா பேசியதற்கு மத்திய மந்திரி பியூஷ் கோயல் எதிர்ப்பு தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில், நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்த விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் ஆ.ராசா பங்கேற்று பேசினார். அப்போது, மணிப்பூர் கலவரம் குறித்து ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதம் பற்றி குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில், ”கடந்த 10 ஆண்டுகளில் சமூக நல்லிணக்கம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கிறது. ஆளுங்கட்சியினர் தங்கள் பதவிக்காலம் முழுவதும் கொடூரமாக நடந்து கொண்டனர்” என்று கூறினார். அவர் பேசும்போது, சனாதன தர்ம சர்ச்சையை குறிப்பிட்டு பா.ஜனதா உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பின்னர், மத்திய மந்திரி பியூஷ் கோயல் பேசியதாவது:-

நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் பற்றிய விவாதத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மற்ற கட்சிகள் பின்தொடர்ந்துள்ளன. ஆனால் சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள், மலிவான அரசியலில் ஈடுபடுவது துரதிருஷ்டவசமானது. கைதட்டல் பெறுவதற்காக, விவாதத்தின் தரத்தை குறைத்து வருகிறார்கள். இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்த ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற விவாதத்தை பற்றி குறிப்பிடுகிறார்கள். இந்தியாவுக்கு எதிரான அந்த கருத்துகளை நீக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆ.ராசா பேச்சுக்கு பதில் அளித்து பா.ஜனதா எம்.பி. ரவிசங்கர் பிரசாத் பேசியதாவது:-

எம்.பி.க்கள், புதிய நாடாளுமன்றத்துக்கு மாற இருக்கிறார்கள். இந்த நேரத்தில், இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்த ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்ற பிரச்சினையை இங்கு எழுப்புவது நியாயமா? சனாதனத்துக்கு எதிரான பேச்சுக்காக ஆ.ராசா மன்னிப்பு கேட்பாரா? இவ்வாறு அவர் பேசினார்.