மகளிர் இடஒதுக்கீடு என்பது இந்திய பெண்களுக்கான சலுகை அல்ல என்றும், அது பெண்களின் உரிமை என்றும் கனிமொழி எம்.பி. மக்களவையில் தெரிவித்தார்.
சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தொடக்கிவைத்தார். இதனையடுத்து, இந்த மசோதா குறித்து திமுக எம்பி கனிமொழி பேசினார். அவர் பேசியதாவது:-
இந்த மசோதாவை நாங்கள் ஏற்கிறோம்; ஆதரிக்கிறோம். ஆனால், துரதிருஷ்டவசமாக பாஜக இதனை அரசியலாக்குகிறது. பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் முதல்முறையாக 1996-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி செய்த பிரதமர் தேவகவுடா தலைமையிலான அரசு இந்த மசோதாவை அப்போது கொண்டு வந்தது. அந்த மசோதாவை அப்போது திமுக ஆதரித்தது. அதன் பிறகு, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்த மசோதா மீண்டும் கொண்டுவரப்பட்டது. ஆனால், அப்போதெல்லாம் மசோதா நிறைவேறவில்லை.
முதல்முறையாக இந்த மசோதா மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது, இந்த மசோதாவை ஆதரித்து நான் பேசினேன். ஆனால், மசோதா மக்களவையில் நிறைவேறவில்லை. 13 ஆண்டுகள் கழித்து தற்போதும் நான் இந்த மசோதாவை ஆதரித்துப் பேசுகிறேன். 13 ஆண்டுகளாக நாம் இது குறித்து பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால், சட்டமாக கொண்டுவரப்படவில்லை.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. எனவே, மசோதாவை நிறைவேற்ற வேண்டிய கடமை பாஜகவுக்கு இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த 2014-ல் இந்த மசோதாவை நிறைவேற்றுமாறு பிரதமருக்கு தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி கடிதம் எழுதினார். 2017ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அதே 2017-ல் தற்போதைய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக சார்பில் டெல்லியில் நாங்கள் பேரணி நடத்தினோம்.
இந்த விவகாரம் தொடர்பாக அவையில் நான் பலமுறை பேசி இருக்கிறேன். அப்போதெல்லாம், ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த மசோதா கொண்டு வரப்படும் என்று பாஜக உறுதியாக கூறியது. ஆனால், தற்போது எத்தகைய ஒருமித்த கருத்து ஏற்பட்டுவிட்டது என்பதை நான் அறிய விரும்புகிறேன். இது தொடர்பாக எந்த விவாதமும் இதுவரை நடக்கவில்லை. உண்மையில் இந்த மசோதாவை பாஜக ரகசியமாகக் கொண்டு வந்திருக்கிறது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பது குறித்து உறுப்பினர்கள் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற பணியாளர்களின் சீருடை ரகசியமாக மாற்றப்பட்டதைப் போன்று இந்த மசோதா திடீரென நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனினும், இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது மனம் முழுமையாக மகிழ்ச்சி அடைந்தது. ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்’ என்ற பாரதியின் பாடல்தான் எனக்கு நினைவுக்கு வந்தது. இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், இது எப்போது அமலுக்கு வரும் என்பது இன்னும் தெரியவில்லை. இந்த மசோதாவை 2024 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு பாஜக கொண்டு வந்திருப்பதாகவே புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த மசோதாவை தொகுதி மறுவரையறையோடு ஏன் தொடர்புபடுத்தி இருக்கிறீர்கள்? மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது, தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறைந்துவிடும் என்ற அச்சம் எங்களுக்கு இருக்கிறது. தொகுதி மறுவரையறை முடிந்த பிறகுதான் இந்தச் சட்டம் அமலாகும் என்றால் அது எப்போது நடக்கும்? நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், நாடுகளின் நாடாளுமன்றங்களில் உள்ள பெண்கள் பிரதிநிதித்துவத்தைவிட நமது நாட்டின் பெண்கள் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக உள்ளது.
ஆண் தைரியத்தை வெளிப்படுத்தினால் அதை நமது சமூகம் ஏற்கிறது. அதுவே ஒரு பெண் தனது தைரியத்தை வெளிப்படுத்தினால் அதை ஏற்க மறுக்கிறது. இந்து மதத்தின் மீது பாஜக மிகுந்த நம்பிக்கை கொண்ட கட்சி. உங்களிடம் நான் கேட்கிறேன். காளி தைரியான தெய்வம் இல்லையா? ஏன் பெண்கள் தைரியமானவர்களாக இருக்கக் கூடாது. பெண்கள் சுதந்திரத்துக்காக போராடவில்லையா? நமது நாட்டின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி தைரியமானவராக இருக்கவில்லையா? ஏன் ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி, சோனியா காந்தி, சுஷ்மா ஸ்வராஜ் போன்ற பெண் தலைவர்கள் தைரியமாகவும் முன்மாதிரியாகவும் இருக்கவில்லையா? இந்த மசோதா பெண்களுக்குக் கொடுக்கப்படும் சலுகை அல்ல. இது சலுகை என சொல்வதை நிறுத்திக்கொள்ளுங்கள். இது பெண்களுக்கான உரிமை. ஆண்களுக்கு சமமாக பெண்கள் நடத்தப்படுவதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்களுக்கும் உரிமை உள்ளது. இந்த நாடு எங்களுக்கு சொந்தமானது. இந்த நாடாளுமன்றம் எங்களுக்கு சொந்தமானது. இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.