கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற 5,336 பேருக்கும் பணி ஆணை வழங்க வேண்டும்: அண்ணாமலை

கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற 5,336 பேருக்கும் தமிழக அரசு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழக மின்வாரியத்தின் கேங்மேன் பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 5,336 பேருக்கு கடந்த 2 ஆண்டுகளாக பணி வழங்காமல் திமுக அரசு வஞ்சித்து வருகிறது. இதனால் விரக்தி அடைந்தவர்கள், கொளத்தூரில் உள்ளமுதல்வரின் தொகுதி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். அரசுப் பணிக்காக தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும், பணி நியமனத்துக்காக பல ஆண்டுகளாகக் காத்திருந்து, வேறுவழியின்றி போராட்டம் நடத்தும் அவலநிலைக்கு இளைஞர்களை தள்ளியிருக்கும் திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதி எண் 187-ஐ, முதல்வருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அரசுப் பணிகளில் காலியாக உள்ள மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, இரண்டு ஆண்டுகளாகியும், மின் வாரியத் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கே பணி நியமனம் செய்யாமல், ஐந்தாயிரத்துக்கும் அதிகமான குடும்பத்தினரை வஞ்சித்து வருகிறீர்கள். இந்தப் போக்கை உடனடியாக நிறுத்திக் கொண்டு, கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற 5,336 பேருக்கும் உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.