பாரதத்தின் ஒரே இலக்கு.. ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவது தான்: ஆளுநர் ரவி

பாரதத்தின் ஒரே இலக்கு ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவது தான் என்றும், பாரதத்தில் மத நல்லிணக்கம் என்ற ஒன்றே கிடையாது எனவும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறினார்.

ஜெயேந்திர சரஸ்வதி சுகாதார மையத்தின் திறப்பு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆளுநர் ரவி, சுகாதார மையத்தை திறந்து வைத்து உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

நீண்டகாலமாக ஐரோப்பியாவின் தத்துவங்களையே நாம் கடைப்பிடித்து வருகிறோம். அது அரசியலாக இருந்தாலும் சரி, கல்வி முறையாக இருந்தாலும் சரி, அதில் ஐரோப்பியர்களின் சிந்தனை திணிப்பு இன்னமும் இருந்து கொண்டே தான் இருக்கிறது. ஐரோப்பிய தத்துவம் என்பது மற்ற உலக நாடுகளுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் பாரதத்திற்கு அது பொருத்தமாக இருக்காது. ஏனெனில் மற்ற நாடுகளை போல ஒற்றை மன்னனால் ஆளப்பட்ட பூமி அல்ல பாரதம்; மாறாக பல மன்னர்களால் ஆளப்பட்ட பிரதேசம் இது. எனவே, ஐரோப்பிய தத்துவத்தால் பாரதத்தை வரையறுப்பது சரியாக இருக்காது.

1947-இல் தான் இந்தியா என்கிற பிரதேசம் உருவானதாக சிலர் சொல்கிறார்கள். அப்படி கூட இருக்கலாம். ஆனால் பாரதம் என்பது பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது. பாரதம் என்பது ஒரு நாடு அல்ல. அது நமது வாழ்வியல். நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் பாரதம் இருக்கிறது. நமது ஒவ்வொரு சடங்கிலும் பாரதம் இருக்கிறது. அதனால்தான் பாரதத்தை நாடு என்று சொல்வதற்கு பதிலாக ‘ராஷ்டிரம்’ என்று சொல்கிறோம். இந்தியாவுக்கு விளக்கம் கொடுக்க வேண்டும். பாரதத்திற்கு எந்த விளக்கமும் தேவை இல்லை.

பாரதத்தின் ஒற்றை குறிக்கோளே ராம ராஜ்ஜியத்தை உருவாக்குவது தான். அனைவரையும் சமமாக பாவிப்பதும், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க செய்வதே ராமராஜ்ஜியத்தின் அடிப்படை. பாரதம் ஒரு மதசார்பற்ற நாடு கிடையாது. என்ன இப்படி சொல்கிறேன் என பார்க்கிறீர்களா? ஆம்.. ஏனென்றால், மத நல்லிணக்கம் என்ற சொல்லாடலே ஐரோப்பியாவில் இருந்து வந்தது தான். ஐரோப்பிய நாடுகளில் மன்னர்களுக்கும், தேவாலயங்களின் குருமார்களுக்கும் இடையேயான மோதலை தடுப்பதற்காக உருவாக்கப்பட்ட சொல் தான் மத நல்லிணக்கம். ஆனால், பாரதத்தில் அனைவரும் ஒரே குடும்பமாக தானே இருந்திருக்கிறார்கள். பாரதத்தில் யாருக்கும் இடையே மோதல் இல்லை. யாருக்கும் யார் மீதும் வெறுப்பு இல்லை. இதுபோன்ற ஒரு பாரதத்தை தான் நாம் உருவாக்க வேண்டும். கூடிய விரைவில் அந்த ராம ராஜ்ஜியம் நடைபெற்ற பாரதம் உருவாகும் என தீர்க்கமாக நம்புகிறேன். உலகுக்கே வழிகாட்டும் பாரதமாக நாம் உருவாக வேண்டும். இவ்வாறு ஆளுநர் ரவி பேசினார்.