முன்னாள் மத்திய அமைச்சர், எம்.பி தயாநிதி மாறன் புதிய பாராளுமன்றத்தில் தமிழை, தமிழனை, தமிழகத்தை தலைகுனிய வைத்து விட்டதாக பாஜகவின் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கடந்த 18ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ராஜ்யசபாவிலும் லோக்சபாவிலும் திமுக எம்.பி.க்கள் பேச எழும்போதெல்லாம் எதிர்வரிசையில் உள்ள ஆளும் பாஜக எம்.பி.க்கள் முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் லோக்சபாவில் நேற்றைய தினம் சந்திரயான் வெற்றி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேசினர். திமுக தரப்பில் ஆ.ராசா பேச எழுந்து, “என்னை லோக்சபாவில் பேச அழைத்ததற்கு நன்றி” என்று கூறி உரையை ஆரம்பித்தார். அப்போது, எதிர்வரிசையில் அமர்ந்திருந்த பாஜக எம்.பி.க்கள் ராசாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி அவரை பேச விடாமல் செய்தனர். அப்போது ஆ.ராசாவுக்கு பின் வரிசையில் அமர்ந்திருந்த தயாநிதி மாறன் எழுந்து பாஜக உறுப்பினர்களை நோக்கி, “உதை வாங்கப் போற நீ, டேய் உக்கார்டா, என்னா என்னா பேசுற ?” என்று தமிழிலேயே காட்டமானார். அப்போது, ஆ.ராசா தயாநிதி மாறனை நோக்கி என்ன சொல்றான் அவன் என தமிழில் கேட்டார். எனினும், பாஜக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
அவையை வழிநடத்திக்கொண்டிருந்த மாற்றுத் தலைவர் ராஜேந்திர அகர்வால், பாஜக உறுப்பினர்களை நோக்கி அமைதியாக அமருங்கள் என்று கூறி ஆ.ராசாவை தொடர்ந்து பேச அறிவுறுத்தினார். ஆனாலும், தொடர்ந்து கோஷங்கள் கேட்டுக்கொண்டே இருந்தன. இதனால் தயாநிதி மாறன், டேய் உக்காருடா.. என்ன என்னா..”என்னய்யா.. என்னய்யா.. நீ மந்திரிதானே.. நீ மந்திரிதானே” என்று கேட்டார். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு எழுந்தது.
இதுதொடர்பான் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், தயாநிதி மாறன் பேச்சுக்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ள பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி, “டேய்!! டேய்.. உதை வாங்கப் போற நீ.. டேய்..உக்கார்டா.. ஆ…. ஊன்னா.. என்னா.. என்னா..” இந்த வார்த்தைகளை பேசியது, தெரு சண்டையில், ‘ரவுடி பட்டியலில்’ இருக்கும் நபர் அல்ல. முன்னாள் மத்திய அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன். பேசியது இன்று புதிய பாராளுமன்றத்தில். தமிழை, தமிழனை, தமிழகத்தை தலை குனிய வைத்த தி மு க. இந்த நபர் பாராளுமன்றத்தில் இருக்க தகுதியற்றவர் என்று பதிவிட்டுள்ளார்.