அங்கீகரிக்கப்பட்ட கொள்ளையே நீட் தேர்வின் உண்மையான இலக்குகளாகும்: பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்!

முதுநிலை நீட் நுழைவுத் தேர்வு தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு சர்ச்சையான நிலையில், அதுதொடர்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் காட்டமாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஆரம்பம் முதலே தொடர்ந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது. 12ஆம் வகுப்புத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வு காரணமாக மருத்துவப் படிப்பில் சேர முடியாததால், உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடிய மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வால் இதுவரை தமிழகத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதனால் நீட் தேர்வு என்றாலே தமிழகத்தில் கொந்தளிப்பு மனநிலையே காணப்படுகிறது.

தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு எதிர்ப்பு என்பது உணர்வுப்பூர்வமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், தமிழக சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய நீட் மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை, ஒப்புதல் அளிக்கவும் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். நீட் தேர்வால்தான் தகுதியும், திறமையும் கொண்ட மருத்துவர்கள் உருவாகுவார்கள் என்றும், இதன்மூலம் மருத்துவப் படிப்பு வியாபாரம் ஆக்கப்படுவது தடுக்கப்படும் என்று பாஜக தரப்பில் வாதம் வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தகுதி மதிப்பெண்கள் பூஜ்ஜியம் பெர்சைன்டைல் ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் 8,000க்கும் கூடுதலான முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் நிரப்பப்படாமல் போகும் என்பதால் தான் தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதாக மத்திய அரசின் தரப்பிலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழக அரசியல் கட்சிகள், நீட் தேர்வுக்காக சொன்ன காரணங்கள் தோல்வியடைந்துவிட்டதாக குற்றம்சாட்டின. எக்ஸ் தளத்தில் ஒரு பதிவர், “முதுநிலை நீட் தேர்வில் மதிப்பெண் பெறாத மருத்துவர்கள் கூட இப்போது நிபுணர்களாலாம். இந்த அரசுக்கு பணம் மட்டுமே முக்கியம். தரம், கொள்கைகள் என்று எதுவும் தேவையில்லை” என விமர்சித்தார்.

இதனை பகிர்ந்த அமைச்சர்பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், “நீட் தேர்வை கொண்டுவருவதற்கு மத்திய அரசு சொன்ன காரணங்கள் அனைத்தும் இப்போது அழிந்துவிட்டன. தகுதியின் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் சேருவதும், பணம் கொடுத்து மருத்துவப் படிப்பில் சேருவதும் நீட் தேர்வின் உண்மையான நோக்கம் அல்ல” என்று தெரிவித்தார்.

மேலும், “மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், கோச்சிங் சென்டரில் சேர்ந்து படிப்பவர்களுக்கு சலுகை கிடைக்க வேண்டும், அங்கீகரிக்கப்பட்ட கொள்ளை ஆகியவையே நீட் தேர்வின் உண்மையான இலக்குகளாகும்” என்றும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாக சாடியுள்ளார். ஆனாலும், நீட் தேர்வின் பூஜ்ஜியம் பெர்சைன்டைல் விவகாரத்தை தெளிவாக புரிந்துகொள்ளவில்லை என்றும் பாஜக தரப்பு கூறிவருகிறது.