ஐநா பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் உலகிலேயே மிக மோசமான மனித உரிமை மீறல்களைக் கொண்ட நாடு என, இந்தியா கடுமையான பதிலடி தந்தது.
ஐ.நா. பொதுச் சபையின் 78-வது கூட்டத்தொடர் கடந்த 18-ம் தேதி தொடங்கியது. இதில் பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் அன்வருல் ஹக் ககர் பேசும்போது, “இந்தியா – பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்பட காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுவது அவசியம்” என்றார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் ஐ.நா. பொதுச் சபைக்கான இந்தியாவின் முதன்மை செயலாளர் பெடல் கலாட் பேசியதாவது:-
தெற்கு ஆசியாவில் அமைதி நிலவ பாகிஸ்தான் 3 முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். முதலில் எல்லை தாண்டிய தீவிரவாதத்தை நிறுத்துவதுடன் அதற்கான கட்டமைப்புகளை உடனடியாக மூட வேண்டும்.இரண்டாவதாக சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும். மூன்றாவதாக, பாகிஸ்தானில் சிறுபான்மையினருக்கு எதிரான மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் ஆகும். இந்தியாவின் உள்விவகாரங்கள் பற்றி கருத்து தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எவ்வித உரிமையும் இல்லை. மனித உரிமைகள் விவகாரத்தில் உலகில் மிகவும் மோசமான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை நோக்கி விரல் நீட்டுவதற்கு முன் பாகிஸ்தான் தனது வீட்டை ஒழுங்குபடுத்துவது நல்லது.
இந்தியாவுக்கு எதிராக அடிப்படையற்ற மற்றும் தீங்கிழைக்கும் பிரச்சாரம் மேற்கொள்ள இந்தஅவையை பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்துகிறது. மனித உரிமைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெறும் மோசமான சம்பவங்களில் இருந்து உலகின் கவனத்தை திசை திருப்பவே பாகிஸ்தான் இவ்வாறு செய்கிறது.
சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் அளித்துள்ளது. 2011-ம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நம்பகமான மற்றும் சரிபார்க்கக்கூடிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 1000 பெண்கள் கடத்தப்பட்டு, கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு, அங்குள்ள பாகிஸ்தானியர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுவதாக அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையமே அறிக்கை வெளியிட்டுள்ளது. எனவே, உலகின் மிக மோசமான மனித உரிமை மீறல்களின் பதிவுகளை கொண்டிருக்கும் நாடு பாகிஸ்தான் என்பதை கூறிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.