தமிழ்நாட்டில் புதிய அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission), நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு 100 மருத்துவ படிப்புக்கான இடம் என்கிற விகிதத்தில் புதிய விதியை ஏற்படுத்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. இதன்படி இந்தியாவில் ஆயிரம் பேர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். இப்படி இருக்கையில் தமிழ்நாட்டில் மட்டும் 600 பேருக்கு ஒரு மருத்துவர்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே தமிழ்நாட்டில் புதியதாக அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளை தொடங்குவதற்கு மத்திய அரசு தடை விதித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கு சமூக செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதாவது “வெளி மாநில/ வெளி நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான நோயாளிகள் ஒவ்வொரு ஆண்டும் சிகிச்சைக்காக தமிழ்நாட்டிற்கு (Medical capital of India) வருகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து திறமையான மருத்துவர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைகள் உள்ளிட்ட இந்தியாவின் பல மாநிலங்களில் வேலை செய்கிறார்கள். இப்படி இருக்கையில் புதிய மருத்துவமனைகளுக்கு தடை விதிப்பது சரியா? என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இதனை கடுமையாக விமர்சித்துள்ளார். தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை “நல்ல செயலுக்கு தண்டனை கொடுப்பதை போல இருக்கிறது” என்று கூறியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது:-
தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவு உண்மையெனில், இது நல்ல செயல்திறனுக்கு தண்டனை கொடுப்பதற்கு சமம். இது மாநில அரசு மற்றும் மாநில சட்டமன்றத்தின் அதிகாரங்கள் மீதான மற்றொரு கடுமையான அத்துமீறலாகும். ஒரு மாநிலம் ஏன் தனது சொந்த நிதியில் இருந்து தன் மாணவர்களுக்காக ஒரு புதிய மருத்துவக் கல்லூரியைத் தொடங்கக்கூடாது? மத்திய அரசும் அதன் அமைப்புகளும் கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டிப் புதைத்து வருகின்றன. மோடி அரசின் கீழ் மாநில உரிமைகள் மீதான தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.