எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் மீது வழக்குகள் தொடரப்படுவதாக உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்திருந்தது.
தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத் துறையில் விடப்பட்ட டெண்டா் முறைகேடு புகாா் தொடா்புடைய வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸாா் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸாா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், நாடு முழுவதும் எதிர்க்கட்சியினர் மட்டுமே வழக்குகளை எதிர்கொள்வதாகவும், ஆளுங்கட்சியினர் யாரும் வழக்குகளை எதிர்கொள்வதில்லை என்றும் கருத்துக் கூறினர். இந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவில் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி கடந்த 2018, ஜூன் 18-ஆம் தேதி புகாா் அளித்தாா். அதில், ‘தனக்கு நெருங்கிய நண்பா்களுக்கும், உறவினா்களுக்கும் ரூ.4,800 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைத் துறை டெண்டா்களை ஒதுக்கியதன் மூலம் முதல்வா் எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் பதவியையும், முதல்வா் பதவியையும் தவறாகப் பயன்படுத்தி சட்டவிரோதமாக ஆதாயம் அடைந்துள்ளாா். இதன் மூலம் அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 13-இன் கீழ் தண்டிக்க வேண்டும்’ என கோரியிருந்தாா்.
அதன் பின்னா், இதே புகாா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்யக் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் ஆா்.எஸ்.பாரதி வழக்கு தொடா்ந்திருந்தாா். இந்த விவகாரத்தை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு அனுமதி அளித்தது. இதை எதிா்த்து இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து, இந்த விவகாரத்தை சென்னை உயா்நீதிமன்றம் விசாரித்து முடிவு எடுக்க உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் கடந்த ஜூலை 18-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்றம் அளித்த தீா்ப்பில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆா்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், ‘ஆா்.எஸ். பாரதி கூறிய குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை முகாந்திரம் உள்ளதா என்பதை கண்டறிய லஞ்ச ஒழிப்புத் துறை கூடுதல் கண்காணிப்பாளா் 2018-இல் ஆரம்பகட்ட விசாரணை நடத்தியுள்ளாா். அதில், புகாரில் போதுமான ஆதாரங்கள் இல்லை. அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வேண்டியவா்களுக்கு சாதகமாக எடப்பாடி பழனிசாமி டெண்டா் வழங்கினாா் என்பதற்கும், சுய லாபம் அடைந்ததற்கும் எந்த ஆதாரமும் இல்லை என்று அறிக்கை அளித்துள்ளாா். இதனால், ஆரம்பகட்ட விசாரணையில் குறைபாடு காண முடியாது. ஆட்சி மாற்றத்தின் காரணமாக புதிதாக விசாரணை நடத்த வேண்டிய அவசியமும் இல்லை’ என நீதிமன்றம் உத்தரவில் தெரிவித்திருந்தது.
இதைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை தரப்பில் உயா்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சம்பந்தப்பட்ட விவகாரத்தில் நிகழ்ந்த முறைகேடு விவகாரங்களை உரிய வகையில் ஆராயாமல் உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு வந்தால் தமது தரப்பு விளக்கத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடந்த ஜூலையில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.