திமுக, கூட்டணிக்காக ஆட்சி நடத்துகிறதா? மக்களுக்கான ஆட்சியா? என்று கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தியிருந்தது. இதனை கர்நாடகா ஏற்கவில்லை. எனவே உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. அதேபோல கர்நாடக அரசும் நீதிமன்றத்தை நாட காவிரி மேலாண்மை ஆணையம் இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆணையமானது, விநாடிக்கு 5,000 கனஅடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு கூறியது. ஆனால் கர்நாடகா இதை ஏற்கவில்லை. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததாலும், ஒட்டுமொத்தமாக பருவமழை குறைந்ததாலும் நீர் வரத்து குறைவாக இருக்கிறது என்று கூறி இந்த நீரை திறக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றமானது, காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டிய அளவுக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இது கர்நாடகாவில் பெரும் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது. குறிப்பாக மண்டியா, சாம்ராஜ் நகர், மைசூர், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் கர்நாடக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை காவிரி நீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் பெங்களூரில் பந்த் நடத்தப்போவதாக அறிவித்துள்ளன. அதேபோல, வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட சலுவாளி கட்சி, கன்னட ரக்ஷன வேதிகே (பிரவீண்) ஆகிய அமைப்புகள், காவிரி பிரச்சனைக்காக செப்டம்பர் 29-ந் தேதி பந்த் நடத்தப்படும் என அறிவித்துள்ளன.
இந்நிலையில், திமுக, கூட்டணிக்காக ஆட்சி நடத்துகிறதா? அல்லது தமிழக மக்கள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறதா? என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
கர்நாடக மாநிலத்தில், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு, இத்தனை ஆண்டுகளாக பிரச்சினை இன்றி வந்து கொண்டிருந்த காவிரி நீரைத் திறந்து விடாமல் நிறுத்தியிருக்கிறார்கள். காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்துப் போராடிய விவசாயிகள் சங்கத்தினரையும், தமிழக காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. திமுக, தமிழக மக்கள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்களா அல்லது கூட்டணிக் கட்சிகள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்களா என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். திமுகவின் கூட்டணிக் கட்சி என்பதால், கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டிக்காமல், மத்திய அரசின் மீது வீண்பழி சுமத்த முயற்சிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுகவால் உருவாக்கப்பட்டு, நெடுங்காலமாக இருந்து வந்த காவிரிப் பிரச்சினைக்கு, பாரத பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முயற்சியால்தான் தீர்வு கிடைத்தது. தற்போதும், தமிழக விவசாயிகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றுதான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. திமுக, தங்கள் தனிப்பட்ட பலன்களுக்காக, தமிழக மக்கள் மற்றும் விவசாயிகள் நலன்களைப் பலிகொடுப்பதை எப்போது நிறுத்தும்? உடனடியாக, தமிழகத்துக்குச் சேர வேண்டிய காவிரி நீரைத் திறந்து விட கர்நாடக மாநில காங்கிரஸ் அரசை தமிழக முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.