காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் தமிழகத்தின் தண்ணீர் உரிமையைப் பாதுகாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
காவிரி நதிநீர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
தமிழகத்துக்கு தண்ணீர் திறந்தால் மக்களைத் திரட்டிப் போராடுவோம் என பாஜக அரசியல் செய்து கொண்டிருக்கிறது. ஆதாயத்துக்காக கர்நாடக மக்களை போராட்டத்துக்கு தூண்டுவது நாட்டின் நலனுக்கு முரணானது. நீதிமன்றம், கூட்டாட்சி உள்ளிட்ட ஜனநாயக அமைப்புகள் மீதான நம்பிக்கையையே சிதைக்கக் கூடியது. மேலும், அரசியல் சாசனத்துக்கு எதிராக கர்நாடக மாநில அரசும், பாஜகவும் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் தமிழகத்தின் தண்ணீர் உரிமையைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.