அதிமுக – பாஜக கூட்டணி விரைவில் இணையும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுக – பாஜக கூட்டணி முடிவை, கூட்டணியிலுள்ள மற்ற தலைவர்களால் ஏற்க முடியவில்லை.. வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பாஜக மேலிடத்துடன் “சமரசம்” பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும்நிலையில், கூட்டணி கட்சிகளும் இதே முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. கிருஷ்ணசாமி, வாசன், போன்றோரும், கூட்டணி முறிவை ஏற்கவில்லையாம்.. அதனால், விரைவில் விரிசலை தளர்த்தி, இரு கட்சிகளையும் இணைக்க முற்படுவார்கள் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். அந்தவகையில், ஜான்பாண்டியனும் இதே முயற்சியை மேற்கொள்வார் என்கிறார்கள். ஒரு சேனலுக்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் பேட்டி தந்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:-
இந்த முடிவானது வருத்தத்துக்குரிய விஷயம்தான்.. ஆனால், இது உண்மையிலேயே நடைமுறைப்படுத்தப்படுமா? அல்லது இன்றுடன் நின்றுவிடுமா என்பது தேர்தல் காலக்கட்டத்தில்தான் முடிவெடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால் இது குறித்து பாஜக என்ன சொல்லபோகிறது? ஜேபி நட்டா என்ன சொல்கிறார்? என்றெல்லாம் தெரியவில்லை.. “என்னுடைய சொந்த கருத்துக்களாக எடுத்து கொள்ள வேண்டுமே தவிர, இதனை பாஜகவின் கருத்துக்களாக எடுத்து கொள்ள கூடாது என்று பலமுறை அண்ணாமலை சொல்லியிருக்கிறார். அப்படியிருக்கும்போது, இந்த விஷயத்தை பார்ப்பதில் வேறு வேறு கருத்துக்கள் உள்ளன.. அண்ணாமலை பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. அதேபோல, பாஜகவில் யாரையுமே விமர்சிக்க கூடாது என்று எடப்பாடி பழனிசாமி தெளிவாக சொல்லி உள்ளார். இப்படி அவர் சொல்கிறார் என்றாலே ஏதோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனால்தான், அதிமுக – பாஜக இணைய வாய்ப்பு இருப்பதாக நம்புகிறோம்..
பாஜகவும் அதிமுகவும் ஒன்றாக இணைந்துவிட்டால், அமோக வெற்றியை பெற்றுவிடுவார்கள் என்பதால், கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதற்காகவே திமுக செய்த சதியாக இது இருக்குமோ என்ற ஐயப்பாடு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தேகம் எங்களுக்கும் உள்ளது. ஏனென்றால், அன்று, அண்ணன் வைகோ வைத்து, அணியை உருவாக்கி, அதிமுகவை வெற்றி பெற வைத்தார் ஜெயலலிதா.. அதுபோலவே, பாஜக + அதிமுக இணைந்துவிட்டால், அமோக வெற்றி பெற்றுவிடும் என்று திமுக நினைக்கிறது. எப்படி பார்த்தாலும், இந்த கூட்டணியை பொறுத்தவரை அதிமுகவா? பாஜகவா? என்று பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டி நாங்கள் முடிவெடுப்போம்.. தேவேந்திர குல வேளாளர் தொடர்பான கோரிக்கைகளை, எங்களுக்கு, பாஜக மட்டுமே நிறைவேற்றி தந்தது என்று சொல்ல முடியாது. அதிமுகவுக்கும் இதில் பங்கு உள்ளது.. அண்ணன் எடப்பாடியின் பங்கு நிறையவே உள்ளது.. எனவே, அதிமுக – பாஜக இருவருமே இணைந்துதான் எங்களுக்கு அரசாணையை பெற்று தந்தார்கள். 3வது அணி என்று இப்போதே ஏன் பேச வேண்டும்? முதலில் தேர்தல் அறிவிக்கப்படட்டும்.. யார் யாருடன் கூட்டணி வைக்க போகிறார்கள் என்பதை அறிவிக்கட்டும்.. 3வது அணி என்பதைவிட, 2வது அணியே இருக்கட்டுமே.. நல்லதே நடக்கும் என்று நினைப்போமே.. அப்படியும் 3வது அணி அமைந்துவிட்டால், செயற்குழுவை கூட்டி முடிவெடுப்போம். அதிமுகவில் இருப்பதா? பாஜகவுடன் இணைவதா? என்று அதற்கு பிறகு முடிவெடுப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.