பாஜக கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டதாக அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது: வேல்முருகன்

பாஜகவுடனான கூட்டணியை அண்ணா திமுக முறித்துக் கொண்டதாக அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது என திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. திடீரென பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதிமுக, பாஜக இடையேயான மோதல் தொடர்பாக சில நாட்களுக்கு முன்னர் கருத்து தெரிவித்திருந்த வேல்முருகன் எம்.எல்.ஏ, சீட்டுக்கும் நோட்டுக்கும் இடையேயான பிரச்சனை; இருதரப்பும் நாடகமாடுகிறார்கள் என விமர்சித்திருந்தார். இந்நிலையில் அதிமுக- பாஜக கூட்டணி முறிவடைந்துவிட்டது குறித்து பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

உண்மையிலேயே இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது. பாராட்டக் கூடிய அறிவிப்பு. மத்திய அரசின் கைகளில் இருக்கிற அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அல்லது சிறப்பு புலனாய்வுத் துறையை வைத்து பல கட்சி மிரட்டி தங்களது கைகளில் வைத்திருக்கிறது பாஜக. அதுபோலவே அதிமுகவையும் மிரட்டி வைத்திருந்தார்கள். இதைத்தான், “மாண்புமிகு” எடப்பாடி பழனிசாமி அவர்கள் சென்னை கூட்டத்தில், நாம் எந்த விளைவுகள் வந்தாலும் அதை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். இனி ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என பேசியிருக்கிறார். இந்த நிலைப்பாட்டில் “மாண்புமிகு” எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் உறுதியாக இருந்தார் என்று சொன்னால் அது இந்தியாவின் இறையாண்மைக்கும் பன்முகத் தன்மைக்கும் சகோதரத்துவத்துக்கும் கண்டிப்பாக நன்மை பயக்கும். இந்திய அளவில் பாஜகவுக்கு அடுத்த பெரிய கட்சியாக அதிமுக இருக்கிறது. பல லட்சக்கணக்கான தொண்டர்களை தன்னகத்தில் வைத்திருக்கிற கட்சி.

இன்றைக்கு “புரட்சித் தலைவர்” எம்ஜிஆர் வழியில், மறைந்த அம்மையார் ஜெயலலிதா வழியில் துணிச்சலான ஒரு முடிவை நம்முடைய தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியாக இருக்கிற எடப்பாடி பழனிசாமி அவர்கள் எடுத்திருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரியது; வரவேற்புக்குரியது. நாளை ஒருவேளை, எங்களுக்கும் அண்ணாமலைக்கும்தான் முரண்பாடு இருந்தது. இன்றைக்கு புதுச்சேரி மாநில தலைவர் மாற்றப்பட்டது போல தமிழ்நாட்டில் பாஜ தலைவரை மாற்றிய பின்னர் பிரச்சனை தீர்ந்துவிட்டது என ஒருகாலத்திலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான் என்னைப் போன்றவர்களின் கருத்து. பெரும்பான்மையான தமிழக மக்களின் கருத்தும் இதுதான். தமிழ்நாட்டில் பாஜகவுடன் கூட்டணி வைக்கிற அரசியல் கட்சிகள், டெபாசிட்டை கூட பெரும்பான்மை தொகுதிகளில் இழக்கின்றனர். இப்போது லட்சக்கணக்கான தொண்டர்களின் செல்வாக்கைப் பெற்ற தமிழ்நாட்டின் அத்தனை கிராமங்களிலும் கிளைகளை, பூத் கமிட்டிகளை வைத்திருக்கக் கூடிய ஒரு கட்சிதான் அதிமுக. அந்த கட்சி பாஜக கூட்டணியில் இருந்து இன்றைக்கு வெளியேறி இருப்பது, தமிழ்நாட்டில் பாஜக டெபாசிட்டை இழக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு இயந்திரங்களை முடுக்கிவிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது இருக்கிற வழக்குகளை தூசு தட்டுவார்கள். கடந்த காலங்களில் அவர்கள் மீதான ஊழல் புகார்களை எடுப்பார்கள். இதை எல்லாம் எதிர்கொண்டு இந்திய நாடு, இந்து நாடாகவும், ஒற்றை மொழி இந்தி மொழியாகவும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற பல்வேறு விடயங்களில் இந்திய பெரும்பான்மை மக்களுக்கு நேர் எதிராக செயல்படுகிற பாஜக அரசு வீழ்த்தப்பட வேண்டும். இவர்களது சித்தாந்தம், கருத்தியல், கொள்கைகளில் இருந்து நாங்கள் வேறுபடுகிறோம் என்கிற ஒரு முடிவை அதிமுக கொள்கைப் பிரகடனமாக அறிவித்து பாஜகவை எதிர்த்து தேர்தலை சந்திக்க வேண்டும். அப்போதுதான் எம்ஜிஆர் காலத்து அதிமுகவாகவும் ஜெயலலிதா காலத்து அதிமுகவாகவும் அக்கட்சி வலிமையடையும்.

மதச்சார்பற்ற கூட்டணி கடந்த லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளில் 38 இடங்களில் வெற்றி பெற்றது. சட்டசபை தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் திமுக வெற்றி பெற்று மாண்புமிகு தளபதி அண்ணன் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. உள்ளாட்சியிலும் எதிர்க்கட்சிகளுக்கு ஒரே ஒரு மேயர் பதவி/ நகர் மன்ற தலைவர் பதவி தராமல் வெற்றி பெற்றிருக்கிறது. மதச்சார்பற்ற கூட்டணி என்பது மக்கள் நலன் சார்ந்த கூட்டணி. மதவாத சக்திகள் இந்த மண்ணில் தலை தூக்க முடியாது. மதச்சார்பற்ற கூட்டணியில் எந்த வித தொய்வும், எள்முனையளவும் ஏற்படாது என்பது என்னுடைய கருத்து. இவ்வாறு பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.