பெங்களூரு முழு அடைப்புக்கு கன்னட சங்கங்களின் ஆதரவு இல்லை என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டு தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து கர்நாடகத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்திற்கு காவிரி நீரை நிறுத்தக் கோரி கர்நாடக நீர் பாதுகாப்பு குழு சார்பில் பெங்களூருவில் இன்று (செவ்வாய்க்கிழமை) முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு வருகிற 29-ந் தேதி கர்நாடக முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து முடிவு எடுக்க அந்த கூட்டமைப்பின் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் கன்னட சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து வாட்டாள் நாகராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பெங்களூருவில் நாளை (இன்று) நடைபெறும் முழு அடைப்புக்கு கன்னட சங்கங்களின் கூட்டமைப்பின் ஆதரவு இல்லை. நாங்கள் வருகிற 29-ந் தேதி கர்நாடக முழு அடைப்பு நடத்த முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் பெங்களூருவில் கவர்னர் மாளிகையை முற்றுகையிடுவோம். பெங்களூரு முழு அடைப்பு வேண்டாம் என்று நாங்கள் கேட்டும், அதை நடத்துகிறவர்கள் ஏற்கவில்லை. பெங்களூரு மட்டுமே கர்நாடகம் இல்லை. எங்களின் குரல் டெல்லியில் உள்ள பிரதமருக்கு கேட்க வேண்டும். இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.